அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பெரும் நடவடிக்கைக்காக தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை பணி நீக்கங்களின் எண்ணிக்கை முந்தைய கணிப்புகளை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் நிர்வாகத்தின் மனித வளத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 3,17,000 அரசு ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர் மேலாண்மை அலுவலகத்தின் இயக்குநர் ஸ்காட் குபோர் முன்னதாக 3,00,000 பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கணித்திருந்தார். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள 3.17 லட்சம் என்ற எண்ணிக்கை முந்தைய கணிப்பை விட அதிகமாகும்.
ட்ரம்ப் நிர்வாகம் தங்கள் திட்டத்தை வேகமாக நகர்த்தி வருவதே இந்த அதிகரித்த எண்ணிக்கைக்கு காரணம் என்று குபோர் பின்னர் ஒரு வலைப்பதிவு இடுகையில் தெளிவுபடுத்தினார்.
திறமையற்ற, வெட்டி சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என ஏற்கனவே டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை அவரது தேர்தல் வாக்குறுதியின் ஒரு முக்கிய பகுதியாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தனது இரண்டாவது பதவி காலத்தின் தொடக்கத்தில் இருந்தே, ஊழியர்களை குறைப்பது சேவைகளை சீரமைக்கும், வரி செலுத்துவோரின் பணத்தை சேமிக்கும் மற்றும் அரசாங்கத்தை அதிக பொறுப்புள்ளதாக்கும் என்று டிரம்ப் நிர்வாகம் வாதிடுகிறது.
டிரம்ப் இரண்டாவது முறையாக பதவிக்கு வருவதற்கு முன், சுமார் 2.4 மில்லியன் பேர் மத்திய அரசு பணியில் இருந்தனர். தற்போது பணியாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்களின் பணி நீக்கம் பற்றிய செய்திகள் வெளியாகி வரும் நிலையில், வாஷிங்டன் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பணிபுரியும் ஊழியர்களிடையே பெரும் கவலை எழுந்துள்ளது. விர்ஜினியாவில் உள்ள சுகாதார மற்றும் மனித சேவை துறையில் நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவர், “நான் 27 ஆண்டுகள் இந்த பணிக்காக என் வாழ்வை அர்ப்பணித்துள்ளேன், இப்போது என் குடும்பம் வேறு இடத்திற்கு செல்ல வேண்டுமா அல்லது வேறு வேலை தேட வேண்டுமா என்று யோசிக்கிறேன்” என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.
ஒரு காலத்தில் இந்த பணி நீக்க முயற்சிகளை ஒருங்கிணைத்த DOGE தற்போது கலைக்கப்பட்டுவிட்டது. எனவே, பணியாளர் மேலாண்மை அலுவலகமே இந்த பணியாளர் மாற்றத்தை கவனித்துக் கொள்ளும்.
இந்தத் திட்டம் ஒருபுறம் பணிநீக்கங்களை அமல்படுத்தினாலும், மறுபுறம் 2025 ஆம் ஆண்டில் சுமார் 68,000 புதிய ஊழியர்களை பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய நியமனங்கள், ஜனாதிபதியின் முன்னுரிமைகளை நோக்கி சிவில் சேவையை மறுவடிவமைப்பதை நோக்கமாக கொண்டுள்ளன.
இந்த முடிவின் உண்மையான தாக்கம், நிலையான அரசாங்க வேலைவாய்ப்பை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையில் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
