மபுடோ: ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் பெரிய கலவரம் நடந்து வருகிறது. இதன் காரணமாக மொசாம்பிக்கில் உள்ள சிறையில் இருந்து 1,500 கைதிகள் தப்பி ஓடியிருக்கிறார்கள். ஏன் அப்படி நடந்தது என்பதை பார்ப்போம்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் கடந்த அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்ந்தது. இதில் ஆளுங்கட்சி சார்பாக அதிபர் டேனியல் சாப்போவும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் வேனான்சியோவும் போட்டியிட்டார்கள். தேர்தல் முடிவில் 61 சதவீத வாக்குகளுடன் ஆளும் கட்சி வேட்பாளர் டேனியல் சாப்போ மீண்டும் வெற்றி பெற்றதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி போராடி வருகின்றன.
இதுதொடர்பான வழக்கு அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் தேர்தல் முடிவுகள் செல்லும் என கோர்ட்டு உறுதி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன, அதன்பேரில் தலைநகர் மபுடோவில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது ஆளுங்கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே பெரிய மோதல் வெடித்தது.
அப்போது ஏற்பட்ட வன்முறையில் 21 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தார்கள். இதற்கிடையே தலைநகர் மபுடோவில் உள்ள சிறையிலும் கலவரம் வெடித்தது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கைதிகள் சிறைச்சாலையின் கதவுகளை உடைத்துக் கொண்டு தப்பினார்கள். அவர்களில் 150 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். எனினும் சிறையில் இருந்து தப்பி ஓடிய 1,500-க்கும் மேற்பட்ட கைதிகளை போலீசார் இப்போது தேடி வருகின்றனர்.