உக்ரைன் மீதான போரை நிறுத்தவில்லையெனில், 100% வரி விதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இதை ரஷ்ய அதிபர் புதின் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த சில ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த போரை நிறுத்த உலக நாடுகள் மற்றும் ஐ.நா. பல்வேறு முயற்சிகள் எடுத்தும் முடியவில்லை. சமீபத்தில் உக்ரைன் மிக ராஜதந்திரமாக ரஷ்ய ராணுவப் படை மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, ரஷ்யாவுக்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. இதற்கு பழி வாங்குவதற்காக ரஷ்யாவும் ஒரு மிகப்பெரிய தாக்குதலை திட்டமிட்டு வருவதாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினுடன் அவ்வப்போது பேசும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனால், புதின் தங்கள் நாட்டின் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கியே தீருவோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இந்த நிலையில்தான் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டேவுடன் வெள்ளை மாளிகையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “நான் வர்த்தகத்தை பல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறேன். அது போரை முடிவுக்குக்கொண்டு வர உதவும்” என்று கூறினார். மேலும், “இன்னும் 50 நாட்களுக்குள் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யா மீது 100 சதவீதம் வரி விதிப்போம்” என்றும் எச்சரித்தார். மேலும், நெதர்லாந்து பிரதமர் பேசியபோது, “உக்ரைனுக்கு மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் கொடுத்து ஆதரவு கொடுப்போம்” என்றும் கூறினார்.
ஏற்கனவே, டிரம்ப், “இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான வணிகத்தை நிறுத்துவேன் என்று சொன்னவுடன் இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்திவிட்டன” என்று கூறியிருந்தார். ஆனால், அவர் சொன்னது பொய் என்று பின்னர் தெரியவந்தது. அதேபோல், ஈரான் – இஸ்ரேல் போரையும் “நான் தான் நிறுத்தினேன்” என்று கூறிக் கொண்டிருக்கிறார். இதை இரு நாட்டு அரசுகளுமே ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அவர் வர்த்தகத்தை பயன்படுத்தி உள்ளார். “100% வரி போட்டால் ரஷ்யா பார்த்து கொண்டு சும்மா இருக்குமா? ரஷ்யாவும் அமெரிக்கா மீது 100 சதவீதம் வரி போடும் தானே? இதுகூட தெரியாமல் டிரம்ப் காமெடி செய்துகொண்டிருக்கிறார்” என நெட்டிசன்கள் அவருடைய கருத்துக்கு பதிலளித்து வருகின்றனர்.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று உலக நாடுகள் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், ரஷ்யா மீது திடீரென 100% வரி விதிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பது ஒரு பக்கம் காமெடியாகவும், ஒரு பக்கம் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
