இதுவரை பறக்கும் கார்களை ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மட்டுமே பார்த்திருப்போம். ஆனால், முதல் முறையாக பறக்கும் கார் தயாராகி உள்ளதை அடுத்து, அந்த கார் சோதனை செய்யப்பட்டு பார்க்கப்பட்டது.
ஒரு ஹெலிகாப்டர் செங்குத்தாக மேலே எழும்புவது போல், இந்த கார் எழும்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகின் முதல் மின்சார பறக்கும் கார் அல்போ ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், இந்த கார் சோதனை செய்து பார்க்கப்பட்டது.
ட்ரோன் பறக்கும் டெக்னாலஜியில் தான் இந்த கார் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சாலையில் இருந்து செங்குத்தாக மேலே எழுந்து, அதன் பின் பறக்கும் இந்த கார் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை வீடியோ கேமிலும் ஹாலிவுட் படங்களில் மட்டும் பார்த்த பறக்கும் கார்கள், வெகு விரைவில் உண்மையிலேயே வான்வெளியில் பறக்க உள்ளன என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
“முதன்முதலாக ரைட் பிரதர்ஸ் விமானத்தை தயாரித்தவுடன் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைந்திருப்பார்களோ, அதே அளவு உற்சாகம் எங்களது பறக்கும் சோதனையின் போது ஏற்பட்டது,” என்று இந்த காரை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வீடியோ கடந்த மாதம் வெளியான நிலையில், 3,200 முன்பதிவு ஆர்டர்கள் குவிந்துள்ளதாகவும், இந்த காரின் தோராய மதிப்பு ரூ.2 கோடியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ராஃபிக் பிரச்சனை இல்லாமல், சில நிமிடங்களில் பல கிலோமீட்டர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் கார் தான் எதிர்கால வாகனம் என்று கூறப்படுகிறது.