வேகம்னா என்னன்னு நான் சொல்லி கொடுக்குறேன்.. சென்னையில் இருந்து மதுரைக்கு வெறும் 3 மணி நேரம்.. உலகின் அதிவேக ஈ-ஸ்கூட்டர் அறிமுகம்..

இங்கிலாந்து சாலைகளில் ‘அச்சுறுத்தல்’ என்று வர்ணிக்கப்பட்டு, முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன், மின்சார ஸ்கூட்டர்கள் தற்போது மேலும் எரிச்சலூட்டும் ஒன்றாக மாற போகின்றன என செய்திகள் வெளியாகியுள்ளது. உலகின் அதிவேக ஈ-ஸ்கூட்டர்…

e scooter

இங்கிலாந்து சாலைகளில் ‘அச்சுறுத்தல்’ என்று வர்ணிக்கப்பட்டு, முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன், மின்சார ஸ்கூட்டர்கள் தற்போது மேலும் எரிச்சலூட்டும் ஒன்றாக மாற போகின்றன என செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகின் அதிவேக ஈ-ஸ்கூட்டர் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு 160 கி.மீ வரை அதிவேகத்தில் செல்லக்கூடியது. அதாவது சென்னையில் இருந்து மதுரைக்கு இந்த பைக்கில் கிட்டத்தட்ட 3 மணி நேரத்தில் சென்றுவிடலாம். ‘தி டர்போ’ (The Turbo) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனம், இங்கிலாந்து நிறுவனமான போ (Bo) என்ற நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இந்நிறுவனம் இதை ‘ஒரு அசுரன்’ என்று செல்லமாக அழைக்கிறது.

போ நிறுவனத்தின் CEO ஆஸ்கார் மோர்கன் இதுகுறித்து கூறியபோது “ஈ-ஸ்கூட்டர்கள் மக்கள் உள்ளூரில் பயணிக்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன, ஆனால் அவை இன்னும் முக்கிய ஆட்டோமொபைல் கலாச்சாரத்தில் நுழையவில்லை. இந்த அதிநவீன மின்சார வாகனங்களை ஆட்டோமொபைல் செயல்திறனின் உச்ச நிலைக்கு உயர்த்துவதே எங்கள் நோக்கத்தின் ஒரு பகுதியாகும்.”

ஆனால் இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 25 லட்ச ரூபாய் என்பதால் எல்லோரும் வாங்கக்கூடிய வகையில் இல்லை. எனவே ஆபத்தும் குறைவு.

போ நிறுவனம் ‘தி டர்போ’-வை உருவாக்க 18 மாதங்கள் செலவிட்டுள்ளது, இது முழுக்க முழுக்க அலுமினியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் மையத்தில் ஒரு ‘அதிநவீன பவர்டிரெய்ன்’ உள்ளது, இதில் 24,000W இரட்டை மோட்டார் உந்துவிசை அமைப்பு இடம்பெற்றுள்ளது. இதன் பேட்டரி 1800Wh அம்சம் கொண்டது. இது ஒரே நேரத்தில் 1,500 ஐபோன்களுக்கு விரைவான சார்ஜிங்கை வழங்கக்கூடிய பவருக்கு சமம்.

இன்று நீங்கள் சாலைகளில் காணும் பெரும்பாலான ஈ-ஸ்கூட்டர்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 15-40 மைல் தூரம் செல்லும். ஆனால் போ நிறுவனத்தின்படி, ‘தி டர்போ’ ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 கி.மீ வரை பயணிக்க முடியும்.

இந்நிறுவனம் தனது முதல் சோதனை ஓட்டங்களை புகழ்பெற்ற குட்வுட் மோட்டார் சர்க்யூட்டில் நடத்தியது. 20 ஓட்டங்களில், தொழில்முறை பந்தய வீரர் ட்ரே ஒயிட் (Tre Whyte) ஓட்டியபோது, இந்த வாகனம் மணிக்கு 135 கி.மீ வேகத்தை எட்டியது.

‘தி டர்போ’-வின் விலை இந்திய மதிப்பில் சுமார் 25 லட்ச ரூபாய் என்பதால் இதை யார் வேண்டுமானாலும் வாங்க முடியாது. “வாங்குவதற்கு ஆர்வமுள்ளவர்கள், ‘தி டர்போ’ தளத்தில் ஒரு ஆன்லைன் போர்டல் மூலம் தங்கள் முந்தைய ஓட்டுநர் அனுபவத்தை சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்” என்று போ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இதுபோன்ற அதிவேக வாகனங்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. இந்த பைக்குகள் குடியிருப்பு பகுதிகள், நகர மைய பாதைகளில் வேகமாக சென்றால் பாதசாரிகள் மற்றும் இதர வாகன ஓட்டுகளுக்கு ஆபத்தை ஏற்படும் என்றும் சிலர் கூறுகின்றனர். எனவே இந்த வாகனம் செயல்பாட்டுக்கு வருமா? தடை செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.