ஒவ்வொரு நாளும் தொலை தொடர்பு மற்றும் இணைய உலகில் புதுப்புது அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. உலகம் முழுவதும் புகைப்படங்கள், வீடியோக்கள், குரல் தகவல் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் செயலி பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. மெட்டா நிறுவனத்துடன் இணைந்து தற்போது வாட்ஸ் அப் பல அதிக சிறப்பம்சங்களைக் கொண்டு விளங்குவதால் இன்று வாட்ஸ்அப் தான் இணைய உலகில் கொடிகட்டிப் பறக்கிறது.
வாட்ஸ் அப் பயன்படுத்துவதற்கு கண்டிப்பாக இணைய வசதி தேவை என்றிருக்கும் நிலையில் தற்போது இணைய வசதி இல்லாமலேயே வாட்ஸ்அப் பயன்படுத்தும் வசதி வர உள்ளது. ஏற்கனவே தகவல்களை அருகருகே அனுப்ப Near by share போன்ற ஆப்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நேரிடையாக வாட்ஸ்அப்-க்கு அனுப்ப முடியாது. தற்போது ஒரு வாட்ஸ்அப் எண்ணுக்கும் அருகில் உள்ள மற்றொரு வாட்ஸ்அப் எண்ணுக்கும் இணைய வசதி இல்லாமலேயே தகவல்களைப் பரிமாறும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஆன்ட்ராய்டு பயனர்கள் அருகில் உள்ள மற்றொரு ஆன்ட்ராய்டு பயனரின் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து மற்றொரு பயனருக்கு தகவல்களை அனுப்பலாம். வாட்ஸ்அப்-ன் 2.24.15.8 என்ற ஆன்ட்ராய்டு வெர்ஷனில் முதன்முறையாக இது சோதனைப்படுத்தப்பட்டது. இது வெற்றிகரமாக செயலாற்றிய நிலையில் விரைவில் அப்டேட் செய்யப்பட்டு பயனர்களுக்கு நடைமுறைக்கு வரும் என வாட்ஸ்அப்-ன் WABeta Info அறிவித்துள்ளது.
சமீபத்தில் வாட்ஸ்அப்-ல் பேவரைட்ஸ் என்ற அப்டேட்டை வெளியிட்டு அடிக்கடி சாட் செய்யும் நபர்களை ஒரு குழுவாகவோ அல்லது பட்டியல்படுத்தியோ வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.