உங்கள் ஸ்மார்ட்போனின் சார்ஜிங் இணைப்பு USB Type-C ஆக இருந்தால், பொது இடங்களில் அல்லது அறிமுகமில்லாத நபர்களிடம் உங்கள் சார்ஜிங் கேபிளை இணைப்பதற்கு முன் இந்த தகவலை நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். தற்போது பரவி வரும் புதிய மோசடியில், குற்றவாளிகள் ஒரு சாதனம் மூலம் உங்கள் மொபைலில் உள்ள தனிப்பட்ட தரவுகளை திருட வாய்ப்புள்ளது.
உங்களிடம் யாராவது, ‘பவர் பேங்க்’ போல தோற்றமளிக்கும் ஒரு கருவியை கொடுத்து “எனது டைப்-சி சார்ஜர் வேலை செய்கிறதா என்று பார்க்க உங்கள் ஃபோனை ஒருமுறை அன்லாக் செய்து இணைக்க முடியுமா?” என்று கேட்டால், தயவுசெய்து அதை செய்யாதீர்கள். அந்த கருவி உண்மையான பவர் பேங்க் அல்ல; அது உங்கள் ஃபோனில் உள்ள கோப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தனிப்பட்ட உரையாடல்கள் அனைத்தையும் நகலெடுக்கக்கூடிய ஒரு ‘குளோனிங்’ சாதனம்.
குற்றவாளிகளின் முக்கிய நோக்கம், அந்த கருவியை பயன்படுத்தி உங்கள் மொபைலை அப்படியே நகலெடுப்பதுதான். பின்னர், அந்த கோப்புகளை கொண்டு உங்களை மிரட்டுவது, பணம் பறிப்பது அல்லது திருடுவது போன்றவை அவர்களின் அடுத்த திட்டமாக இருக்கும். இருப்பினும், இந்த மோசடி வெற்றிகரமாக வேலை செய்ய வேண்டுமானால், நீங்கள் உங்கள் ஃபோனை அன்லாக் செய்வது அவசியம். அன்லாக் செய்யும்போதுதான், அந்த கருவிக்கு உங்கள் மொபைலில் உள்ள கோப்புகளை அணுகி டிரான்ஸ்பர் செய்ய அனுமதி கிடைக்கும்.
தற்போது இது போன்ற பல மோசடி வழக்கு காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒரு வழக்கு என்னவெனில் ஆன்லைனில் அறிமுகமான ஒரு நபர், ஒரு பெண்ணை சினிமா பார்க்க அழைத்து சென்றுள்ளார். திரைப்படத்தின் நடுவே, அவர் தனது டைப்-சி சார்ஜிங் கேபிள் வேலை செய்யவில்லை என்று கூறி, அதை அந்த பெண்ணின் போனில் ஒருமுறை இணைத்து பார்க்க அனுமதி கேட்டுள்ளார். அப்பாவியான அந்த பெண் தனது போனை அன்லாக் செய்து கொடுத்துவிட்டு, படத்தை பார்த்து கொண்டிருந்தார்.
சுமார் ஐந்து நிமிடங்களுக்கு பிறகு, அந்த நபர் போனைத் திருப்பி கொடுத்துவிட்டு, “மறந்துவிட்டேன்” என்று கூறி பேச்சை மாற்றினார். சில நாட்களுக்குப் பிறகு, அந்த நபர் அந்த பெண்ணின் மொபைலில் இருந்து திருடப்பட்டிருந்த மிகவும் தனிப்பட்ட கோப்புகளை காட்டி மிரட்ட தொடங்கினார். அந்த கோப்புகள் அவருக்கு எப்படி சென்றது என்று கூட அந்த பெண்ணால் உடனடியாக நினைவுகூர முடியவில்லை.
எனவே, இனிமேல் உங்கள் USB Type-C கேபிளை, உங்கள் சொந்த அடாப்டர் இல்லாமல், அறிமுகமில்லாத ‘பவர் பேங்க்’ அல்லது பொது சார்ஜிங் நிலையங்களில் இணைப்பதற்கு முன், உங்கள் மொபைலின் செட்டிங்ஸில் ‘அன்லாக் செய்தாலன்றி சார்ஜ் செய்யக் கூடாது’ என்ற அம்சத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது, பாதுகாப்பிற்காக உங்களுக்கென ஒரு பவர் பேங்கை எப்போதும் வைத்து கொள்வது மிகச் சிறந்த தீர்வாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
