மாநகராட்சி அதிகாரிகள், குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் போடும்போது மக்கும் குப்பையை தனியாகவும், மக்காத குப்பையை தனியாகவும் போட வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். இதனை மக்கள் கூடுதல் கவனத்துடன் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆனால், தற்போது இதற்கும் AI வந்துவிட்டது! AI தொழில்நுட்பத்துடன், ஒரு புதிய குப்பைகளை தரம் பிரிக்கும் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலம், குப்பைகளை புகைப்படம் எடுத்து, மக்கும் குப்பை எது, மக்காத குப்பை எது என்று கண்டுபிடித்து தனித்தனியாக பிரித்து தருகிறது.
AI தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்ப்யூட்டர் மூலம் இந்த மெஷின், மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகள் எது, சாதாரண குப்பை எது, மக்கும் குப்பை எது, மக்காத குப்பை எது என்பதைக் களத்திலேயே துல்லியமாக பிரிக்கிறது. அதுமட்டுமின்றி, கார்டுபோர்டு, கண்ணாடி, உலோகம், காகிதம், பிளாஸ்டிக், பொதுவான குப்பை என ஆறு வகையாகவும் பிரிக்கும் அளவிற்கு இந்த மெஷின் திறன் கொண்டதாக உள்ளது.
சோதனை முயற்சியாக, 2000க்கும் மேற்பட்ட குப்பை படங்களை சேகரித்து ஒவ்வொரு பொருளையும் வகைப்படுத்த முயன்றபோது, இந்த மெஷின் மிகச் சரியாக பிரித்ததாகவும், எத்தனை வகையான குப்பைகள் இருந்தாலும் அவற்றை துல்லியமாக வகைப்படுத்த முடியும் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் 62 மில்லியன் டன் குப்பை உருவாகிறது. ஆனால், அதில் 42 மில்லியன் மட்டுமே சேகரிக்கப்படுகின்றன. மேலும், 12 மில்லியன் டன் மட்டுமே சரியாக தரம் பிரிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்த மெஷின், மிகப்பெரிய அளவில் குப்பைகளை தரம் பிரிக்க உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
உலக அளவில், 2050 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் மூன்று பில்லியன் மெட்ரிக் டன் குப்பைகள் சேர கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த மெஷின் இருந்தால் மட்டுமே, அவற்றை தரம் பிரித்து கழிவுகளை சரியாக நிர்வகிக்க முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
முதல் கட்டமாக சோதனை செய்தபோது, இந்த தானியங்கி குப்பை பிரிக்கும் மெஷின் 85% துல்லியமான முடிவுகளை வழங்கியது. எதிர்காலத்தில், இந்த மெஷின் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AI அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மெஷின், நிச்சயம் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக அமையும்.