கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் தேடுபவர்களுக்கு உடனடி பதில்களை வழங்கும் ‘AI Overviews’ என்ற அம்சம், பயனர்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த அம்சம் தற்போது சில பயனர்களை மோசடி வலையில் சிக்க வைத்துள்ளது. ஆன்லைனில் ஒரு சேவைக்கான வாடிக்கையாளர் ஆதரவு எண்ணை தேடிய சிலர், கூகுளின் செயற்கை நுண்ணறிவு அளித்த தவறான எண்ணால் பணத்தையும் தனிப்பட்ட தகவல்களையும் இழந்துள்ளனர்.
வாடிக்கையாளரின் மோசமான அனுபவம்
சமீபத்தில், அலெக்ஸ் ரிவ்லின் என்ற ஃபேஸ்புக் பயனர், தான் ராயல் கரீபியன் கப்பல் நிறுவனத்தின் ஷட்டில் சேவையை முன்பதிவு செய்வதற்கான தொடர்பு எண்ணை தேடியபோது நடந்த மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ‘AI Overview’ அம்சம், அதிகாரப்பூர்வமானதாக தோன்றும் ஒரு எண்ணை தேடல் முடிவுகளில் முதலாவதாக காட்டியுள்ளது. ரிவ்லின் அந்த எண்ணை அழைத்தபோது, பேசிய நபர், தன்னை நிறுவனத்தின் பிரதிநிதி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, முன்பதிவை உறுதிப்படுத்த அவரது கிரெடிட் கார்டு விவரங்களை கேட்டுள்ளார்.
அதன் பிறகு, கூடுதல் கட்டணங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை கேட்டபோது சந்தேகம் அடைந்த ரிவ்லின், அழைப்பை துண்டித்துள்ளார். உடனடியாக, தனது கிரெடிட் கார்டில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடந்திருப்பதை கண்ட அவர், உடனடியாக தனது கார்டை முடக்கியுள்ளார். இந்த சம்பவம், செயற்கை நுண்ணறிவு மூலம் மோசடி எண்கள் அதிகாரப்பூர்வமானவை போல தோன்றினால், மக்கள் எவ்வளவு எளிதாக ஏமாறக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
ஏன் இந்த குளறுபடி?
இந்த மோசடி புதிதல்ல, ஆனால் செயற்கை நுண்ணறிவு அதன் பரவலை அதிகரித்துள்ளது. மோசடியாளர்கள் பொதுவாக பல இணையதளங்களில் போலியான தொலைபேசி எண்களை பரப்புகின்றனர். இந்த எண்கள் போதுமான அளவு மீண்டும் மீண்டும் இணையத்தில் இடம்பெறும்போது, கூகுளின் தேடல் அமைப்புகள் அவற்றை நம்பகமான தகவல்களாக அங்கீகரிக்கலாம். ‘AI Overviews’ அம்சம், இந்த எண்களை நேரடியாக தேடலில் காட்டுவதால், அவை மேலும் நம்பகத்தன்மையுடன் தோன்றுகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு, ரெடிட் பயனர் ஒருவர் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் கஸ்டமர் கேர் எண்ணை தேடியபோது இதேபோன்ற அனுபவம் தனக்கும் ஏற்பட்டதாக பகிர்ந்துள்ளார். அப்போது, செயற்கை நுண்ணறிவு அளித்த போலி எண்ணை தொடர்பு கொண்டபோது, அவர் ஒரு மோசடியாளரிடம் மாட்டிக்கொண்டுள்ளார். கூகுள் இந்த சம்பவங்கள் குறித்து இதுவரை எந்த பொதுவான அறிக்கையும் வெளியிடவில்லை.
இந்தச் சிக்கல்களின் தீவிரத்தை கருத்தில்கொண்டு, ஆன்லைன் நிபுணர்கள் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தரும் தகவல்களை முழுவதுமாக நம்ப வேண்டாம்: ஒரு நிறுவனத்தின் தொடர்பு எண்ணைத் தேடும்போது, செயற்கை நுண்ணறிவு தரும் எண்ணை ஒருமுறை சரிபார்த்து அதன்பின்னர் பயன்படுத்துங்கள். அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பயன்படுத்துங்கள்: எப்போதும் அதிகாரப்பூர்வ நிறுவன வலைத்தளங்களை தொடர்பு கொண்டு செயற்கை நுண்ணறிவு கொடுத்த தொலைபேசி எண்களை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஆன்லைன் மோசடிகள் மிகவும் நுட்பமாக மாறிவரும் இந்த காலகட்டத்தில், ஒரு எண்ணை அழைக்கும் முன் அதை மீண்டும் சரிபார்ப்பது மிகவும் முக்கியமானது. இது நிதி இழப்பு மற்றும் தனிப்பட்ட தரவு திருடு போவதை தடுக்க உதவும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
