உலகின் முன்னணி பிரவுசர்களில் ஒன்றான மொசில்லா பயர்பாக்ஸ் ஏராளமான பயனாளிகளை கொண்டுள்ள நிலையில், தற்போது இந்நிறுவனம் தனது கொள்கையில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த வாரம், மொசில்லா பயர்பாக்ஸ் புதிய பயன்பாட்டு விதிமுறைகளை அறிமுகப்படுத்திய நிலையில், இந்த விதிமுறைகள் பயனாளர்களின் டேட்டாக்களில் அவர்களுக்கு உரிமை இருப்பதாக தோன்றும் கருத்துகளை உருவாக்கியுள்ளன.
பயர்பாக்ஸை நீங்கள் பயன்படுத்தும் போது, உங்கள் சில முக்கியமான டேட்டாக்கள் அதில் பதிவு செய்யப்படும். இதுவரை, அந்த பதிவு விற்பனைக்கு அல்ல என்பது மொசில்லாவின் உறுதிமொழியாக இருந்தது. ஆனால், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு, பயர்பாக்ஸை பயன்படுத்த நீங்கள் மொசில்லாவுக்கு தேவையான உரிமைகளை வழங்குகிறீர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உங்கள் டேட்டாக்கள் விற்பனை செய்யப்படும் வாய்ப்பு அதிகம் என்பதும், உங்கள் டேட்டாக்களை பயன்படுத்த ராயல்டி இல்லாத உலகளாவிய உரிமம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதை உறுதி செய்தால் மட்டுமே பயர்பாக்ஸைப் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக, பயனாளர்களின் டேட்டாவை விற்பது என்பது பெரும்பாலான நிறுவனங்களும் செய்து வரும் ஒரு செயலாகும். தற்போது, மொசில்லாவும் அதே பாணியை பின்பற்றுவதாக தெரிகிறது. இதற்கான எதிர்ப்பாக, ஏராளமான பயனாளிகள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.