இந்தியாவின் சுதேசி தொழில்நுட்ப இயக்கத்தில், கூகுள் மேப்ஸை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில், மேப் மை இந்தியா (Map My India) நிறுவனத்தின் முழுமையான உள்நாட்டு வழிசெலுத்தல் தளமான ‘மேபிள்ஸ்’ (Mappls) களமிறங்கியுள்ளது. மத்திய அரசின் மிகப்பெரிய ஆதரவு, ரியல் டைம் போக்குவரத்து சிக்னல் ஒருங்கிணைப்பு (Real-time traffic signal integration) மற்றும் இந்தியா போஸ்ட், இஸ்ரோவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட டிஜிட்டல் முகவரி அமைப்பு (Digi-Pin) ஆகியவற்றுடன் ‘மேபிள்ஸ்’ கூகுள் மேப்ஸுக்கு சவால் விடுகிறது.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தனது காரில் ‘மேபிள்ஸ்’ செயலியை பயன்படுத்தும் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, “சுதேசி மேபிள்ஸ், நல்ல அம்சங்கள் கொண்டது, கட்டாயம் முயற்சிக்கவும்” என்று பதிவிட்டிருந்தார். இது மத்திய அரசின் உயர்மட்ட ஆதரவின் தெளிவான சமிக்ஞையாக கருதப்படுகிறது.
‘மேபிள்ஸ்’ வெறும் ஒரு செயலி அல்ல; அது இந்தியாவின் தேசிய உள்கட்டமைப்பு தளமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்படும் 80 முதல் 90% கார்களில் வழிசெலுத்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் முக்கிய அம்சங்கள்:
3டி தோற்றம்: பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் உள்ள சிக்கலான சந்திப்புகளில் ஓட்டுநர்கள் தெளிவாக வழிசெலுத்த உதவுகிறது.
உள்ளூர்மயமாக்கப்பட்ட வழிகாட்டல்: உலகளாவிய தளங்களை போலன்றி, மேபிள்ஸ் இந்தியாவிற்காக, இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது.
லைவ் சிக்னல் டைமர்கள்: பெங்களூரு போக்குவரத்து போலீஸுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, நகரின் 125-க்கும் மேற்பட்ட சிக்னல்களில் நிகழ்நேர சிக்னல் கவுண்ட்டவுன் வசதியை வழங்கும் இந்தியாவின் முதல் வழிசெலுத்தல் செயலியாக ‘மேபிள்ஸ்’ உள்ளது.
டிஜி-பின் ஒருங்கிணைப்பு: இந்தியா போஸ்ட், இஸ்ரோ மற்றும் ஐஐடி ஹைதராபாத் கூட்டணியில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 3.8 சதுர மீட்டர் இடத்திற்கும் தனித்துவமான டிஜிட்டல் முகவரியை இது வழங்குகிறது.
தகவல் இறையாண்மை : அனைத்துத் தகவல்களும் இந்தியாவிற்குள்ளேயே சேமிக்கப்படுகின்றன. வெளிநாட்டு சேவையகங்கள் மற்றும் வெளிப்புற செயல்பாட்டாளர்களை சார்ந்து இருக்க வேண்டியதில்லை.
மேப் மை இந்தியா நிறுவனத்தின் இணை நிறுவனர் ரக்கேஷ் வர்மா கூறுகையில், “அமெரிக்கா ஜிபிஎஸ் சேவையை நிறுத்தினால் அல்லது கூகுள் வெளியேறினால், இந்தியா தனியாக நிற்க முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பிஎல்ஐ (PLI) திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் கூகுள் மேப்ஸ் போல ‘மேபிள்ஸ்’ செயலியை இயல்பாகவே முன்கூட்டியே நிறுவ வேண்டும் என மத்திய அரசிடம் மேப் மை இந்தியா வலியுறுத்தியுள்ளது. இது அங்கீகரிக்கப்பட்டால், சந்தை ஒரே இரவில் மாறும் என்று வர்மா நம்புகிறார்.
இந்திய ரயில்வேயுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் நாடு தழுவிய போக்குவரத்து சிக்னல் மற்றும் ரயில்வே வழிசெலுத்தலை ஒருங்கிணைக்க மேபிள்ஸ் இலக்கு கொண்டுள்ளது.
நாங்கள் எங்கள் லாபத்தில் ஒரு பகுதியை மீண்டும் முதலீடு செய்கிறோம். தற்போது வரை 35 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் நடந்துள்ளன. இந்த அரசு ஆதரவு எங்களுக்கு மாபெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது. ஒரு நாளில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்கள் வந்துள்ளன. மக்கள் இதை அதிகம் பயன்படுத்தினால், நாங்கள் இன்னும் மேம்படுத்தத் தயாராக இருக்கிறோம்,” என்று ரக்கேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.
ஜோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு போன்ற தொழில் தலைவர்களும் ‘மேபிள்ஸ்’ செயலியை பாராட்டி வருகின்றனர். ‘மேபிள்ஸ்’ இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, வெளிநாட்டு தளங்களைச் சாராமல் சுயமாக இயங்கும் டிஜிட்டல் இறையாண்மைக்கு ஒரு புதிய வழியைத் திறந்துள்ளது.
வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக ஒரு அரட்டை போல், கூகுள் குரோமுக்கு மாற்றாக ஒரு உலா செயலி போல், கூகுள் மேப்ஸ்க்கு ஒரு மேப்பிள்ஸ் என்பதால் இந்தியா முழுக்க முழுக்க சுதேசிய நோக்கி செல்வதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
