உலகிலேயே இரண்டாவது பெரிய மொபைல் சந்தையான இந்தியாவின் மதிப்பு கிட்டத்தட்ட 40 பில்லியன் டாலர்கள் ஆகும். இவ்வளவு பெரிய சந்தையில், 98% ஆதிக்கம் வெளிநாட்டு நிறுவனங்களின் கைகளில் உள்ளது, அதில் Xiaomi, Vivo, Oppo போன்ற சீன நிறுவனங்கள் மட்டும் சுமார் 80% சந்தையை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகின்றன. உள்ளூர் இந்திய நிறுவனங்களின் பங்கு வெறும் 2% ஆக மட்டுமே இருக்கும் சூழலில், சீன பிராண்டுகளுக்கு சவால் விடும் வகையில், ஒரு இந்திய நிறுவனமான ‘லாவா’ தற்போது அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
2010 ஆம் ஆண்டுக்கு முன், இந்திய மொபைல் சந்தையின் ‘கிங்’ என்று கருதப்பட்ட மைக்ரோமேக்ஸ் என்ற இந்திய நிறுவனம், சாம்சங் நிறுவனத்திற்கே சவால் விட்டது மட்டுமல்லாமல், ஐரோப்பிய சந்தைக்குள் நுழைந்த முதல் இந்திய நிறுவனமாகவும் திகழ்ந்தது. ஆனால், அத்தகைய ஜாம்பவான் நிறுவனம் வெறும் ஐந்தே வருடங்களில் சீன நிறுவனங்களால் வீழ்த்தப்பட்டது. அதற்கு காரணம், இந்தியாவில் மொபைல் போனை உருவாக்க தேவையான முழுமையான தொழில்மயமாக்கல் சூழல் அதாவது மைக்ரோசிப்ஸ், பிராசஸர்கள், தயாரிப்புக் கோடுகள் இல்லாததுதான்.
இதனால், மைக்ரோமேக்ஸ் சீனாவில் இருந்து உதிரிபாகங்களை வாங்கி, இந்தியாவில் வெறும் அசெம்பிளிங் மட்டுமே செய்ய முடிந்தது. இதன் விளைவாக, புதிய மாடல்களை அறிமுகப்படுத்த மைக்ரோமேக்ஸுக்கு 3 முதல் 4 வருடங்கள் தேவைப்பட்டன, ஆனால் சீன நிறுவனங்கள் ஒரு வருடத்திற்குள் அதை செய்தன. மேலும், பழுதுபார்க்க வாடிக்கையாளர்கள் குறைந்தது இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், மைக்ரோமேக்ஸ் மீதான நம்பகத்தன்மை அடியோடு வீழ்ந்தது. இறுதியாக, குறைவான விலையில் சீனாவால் போட்டியிட முடிந்ததால், மைக்ரோமேக்ஸ் இந்தசந்தை போட்டியில் இருந்து விலகியது.
மைக்ரோமேக்ஸின் வீழ்ச்சியை கூர்ந்து கவனித்த லாவா நிறுவனம் சீனாவை நேரடியாக எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்ந்தது. எனவே, ஸ்மார்ட்போன் சந்தையில் நுழையாமல், முதலில் ஃபீச்சர் போன்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி, அதில் முதன்மை இடத்தைப் பிடித்தது. அந்த வியாபாரத்தில் கிடைத்த இலாபத்தை, இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கத் தேவையான முழுமையான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தி சூழலை உருவாக்க பயன்படுத்தியது. இந்த முயற்சிக்கு, இந்தியாவில் உற்பத்தியை பெருக்க மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த PLI (Production-Linked Incentive) திட்டம் பெரும் ஆதரவாக அமைந்தது.
இந்த சூழலை பயன்படுத்திய லாவா, ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைந்து, முதலில் ரூ.10,000-க்கு குறைவான செக்மென்ட்டை கைப்பற்ற முடிவெடுத்தது. முழுக்க முழுக்க இந்தியாவில் உற்பத்தி செய்ததால், சிறந்த விற்பனைக்கு பிந்தைய சேவையையும் வழங்க முடிந்தது. இது லாவாவுக்கு நிலையான வாடிக்கையாளர் தளத்தை உருவாக்கி கொடுத்தது. இந்த வெற்றியை அடுத்து, அவர்கள் ரூ.15,000-க்குக் குறைவான செக்மென்டிற்குள் நுழைந்தனர். 2025 ஆம் ஆண்டு மட்டும் லாவா நிறுவனம் கிட்டத்தட்ட 125% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும், அவர்களின் பிளாக்ஷிப் மாடலான ‘அக்னி’ வரிசை ஸ்மார்ட்போன்களுக்கு கிடைத்த வரவேற்பு, ஒவ்வொரு செக்மென்ட்டிலும் சீன நிறுவனங்களுக்கு போட்டியாக லாவாவை உயர்த்தியுள்ளது.
லாவா நிறுவனத்தின் தற்போதைய இலக்கு, அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் ரூ.30,000க்கு குறைவான ஸ்மார்ட்போன் செக்மென்டில் 10% முதல் 15% சந்தை பங்கை பிடிப்பதாகும். இந்த இலக்கை அடைந்தால், தனித்தனியான Vivo, Oppo நிறுவனங்களுக்கு நிகரான ஒரு இந்திய நிறுவனமாக லாவா உருவாகும்.
மைக்ரோமேக்ஸை வெளியேற்றியது போல, லாவாவை சந்தையிலிருந்து அகற்ற சீன நிறுவனங்கள் தீவிரமான வியூகங்களை வகுக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், லாவாவிடம் எந்த குறையும் இல்லை என்றும், அதன் போன்கள் தரமானதாக இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் கூறுவது அதன் பலம். ஒரு வலிமையான அரசு, தெளிவான பொருளாதார திட்டங்களை வகுக்கும்போது, இந்திய நிறுவனங்களாலும் சீன நிறுவனங்களை எதிர்த்து வெற்றிபெற முடியும் என்பதற்கு லாவா ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
