அமேசானின் AWS செயலிழப்பு: இணையமே ஸ்தம்பித்தது ஏன்? ஒரே நிறுவனத்தின் கையில் இவ்வளவு அதிகாரமா? ஒட்டுமொத்த உலகமும் ஒரே நிறுவனத்தின் கையில் இருப்பது ஆபத்து.. தனி சர்வர்களை அமைக்க போகிறதா பெரிய நிறுவனங்கள்?

நேற்று உலகம் முழுவதும் இணைய சேவைகள் முடங்கின. பல செயலிகள் உறைந்து போயின, இணையதளங்கள் செயலிழந்தன, பல கோடி மக்களுக்கு தங்களுக்கு பிடித்த இணைய சேவைகளுக்கான அணுகல் கிடைக்கவில்லை. இதற்கு என்ன காரணம்? ஒரே…

aws

நேற்று உலகம் முழுவதும் இணைய சேவைகள் முடங்கின. பல செயலிகள் உறைந்து போயின, இணையதளங்கள் செயலிழந்தன, பல கோடி மக்களுக்கு தங்களுக்கு பிடித்த இணைய சேவைகளுக்கான அணுகல் கிடைக்கவில்லை. இதற்கு என்ன காரணம்? ஒரே
காரணம், அமேசான் வெப் சர்வீசஸ் தோல்வி

இந்த உலகளாவிய இணைய செயலிழப்புக்குக் காரணம், அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுதான்.

இணைய நிறுவனங்கள் தங்களது சேவைகளை இயக்க தேவையான சர்வர் இடங்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ள AWS அனுமதிக்கிறது. இணையத்தின் ஒரு பெரிய ‘கிடங்கு’ போல AWS செயல்படுகிறது. இந்த ஒரு நிறுவனத்தில் ஏற்பட்ட ஒரு சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சேவைகள் முடங்கின.

ஸ்னாப்சாட், ரெடிட், வாட்ஸ்அப், ஆன்லைன் வரி செலுத்தும் தளங்கள் மற்றும் வங்கி செயலிகள் உட்பட பல கோடிப் பயனர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.

AWS என்றால் என்ன? இணையம் உடைந்தது எப்படி?

AWS உலகின் மிகப்பெரிய கிளவுட் சேவைகள் நிறுவனம் ஆகும். இணையத்தில் நாம் பயன்படுத்தும் படங்கள், வீடியோக்கள், மென்பொருள்கள் மற்றும் தரவுகள் அனைத்தையும் இந்த நிறுவனம் தனது சர்வர் மையங்களில் சேமிக்கிறது.

ஒவ்வொரு நிறுவனமும் தனியாக சர்வர் வாங்குவதற்கு பதிலாக, AWS-ஸில் இடத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. எனவே, AWS செயலிழந்தால், இணையத்தின் ஒரு பெரிய பகுதி அதனுடன் சேர்ந்து செயலிழந்துவிடும்.

நேற்று காலை, AWS-ன் முக்கியத் தரவு மையங்களில் ஒன்றில் அதிக அளவில் பிழைகள் ஏற்படுவதை அமேசான் பொறியாளர்கள் கண்டறிந்தனர். இந்த செயலிழப்புக்கு காரணம் டி.என்.எஸ். (DNS – Domain Name System) தோல்விதான் என்று கூறப்படுகிறது.

டி.என்.எஸ். என்பது இணையத்தின் ‘தொடர்புப் பட்டியல்’ போன்றது. நாம் google.com என்று தட்டச்சு செய்யும்போது, அந்த பெயருக்குரிய சரியான இணைய முகவரியை இதுதான் கண்டுபிடித்துத் தருகிறது. ஆனால், நேற்று அந்த அமைப்பு வேலை செய்வதை நிறுத்தியதால், பெயர்களுடன் முகவரிகளை பொருத்த முடியவில்லை. எனவே, நாம் ஒரு செயலியை திறக்கும்போது, எங்கே செல்ல வேண்டும் என்று சாதனத்திற்கு குழப்பம் ஏற்பட்டது.

ஒரு தரவுத்தள அமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக, ஒரு சில நிமிடங்களில் இணையத்தின் பெரும்பகுதியை ஸ்தம்பித்ததக AWS தெரிவித்துள்ளது.

இந்த செயலிழப்பு, இணையம் எவ்வளவு பலவீனமாக மாறியுள்ளது என்பதை அம்பலப்படுத்தியது. உலகின் பெரும்பாலான செயலிகள் ஒரு சில நிறுவனங்களின் சேவைகளை மட்டுமே நம்பியுள்ளன. ஒரு நிறுவனத்தின் தோல்வி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதை சுட்டிக்காட்டி அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரன் கடுமையாக சாடினார். அவர், “ஒரு நிறுவனத்தால் ஒட்டுமொத்த இணையத்தையும் உடைக்க முடியுமானால், அது மிக பெரியது. அவ்வளவுதான். பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை பிரித்து வைக்க இதுவே சரியான நேரம்” என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

இணையத்தின் இவ்வளவு பெரிய அதிகாரத்தை ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே கட்டுப்படுத்த கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய செயலிழப்பு, ஒட்டுமொத்த உலகமும் ஒரு சில சக்திவாய்ந்த கைகளில் இயங்குகிறது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியுள்ளது.