நம்மைச் சூழ்ந்திருக்கும் பல்வேறு விஷயங்கள் குறித்த பின்னணி நமக்கு தெரியாமல் இருந்தாலும் நாம் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறோம். உதாரணத்திற்கு செல்போன், கணினி, லேப்டாப், மிதிவண்டி எனும் பல விஷயங்களை நாம் பயன்படுத்தினாலும் இதன் பின்னால் உள்ள நிறைய விஷயங்கள் நமக்கு ரகசியமாகவே தான் இருந்து கொண்டிருக்கும். இந்த விஷயங்கள் எல்லாம் கண்டுபிடித்தது யார்?, உருவாக காரணமாக இருந்த வரலாற்று பின்னணி என்ன என பல கேள்விகளை கேட்டால் ஒரு சிலர் மட்டுமே அரிதாக தகவல்களை தெரிவிப்பார்கள்.
ஆனால் இன்னொரு பக்கம் நாம் ஏன் இதையெல்லாம் பயன்படுத்தி இருக்கிறோம், இது இப்படி இருப்பதற்கான காரணம் என்ற கேள்விகள் என்றென்றைக்குமே தெரியாமலே தான் இருந்து வருகிறது. அதில் முக்கியமான விஷயங்கள் கணினி மற்றும் லேப்டாப்பை சுற்றியும் நிறைய உள்ளது. அந்த வகையில் கணினியில் தோன்றும் மவுஸ் பாயிண்டரின் பின்னணி என்ன என்பது பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
கணினி அல்லது மடிக்கணினியில் நாம் மவுஸ் பயன்படுத்தும் போது அது எங்கே இருக்கிறது என்பதை காட்டுவதற்காக திரையில் ஒரு அம்புக்குறி போன்ற பாயிண்டர் இடம்பெற்றிருக்கும். இது நாம் மவுசை எங்கெங்கே நீக்கி செல்கிறோம் என்பதை அறிந்து கொள்வதற்கான அடையாளமாக இருப்பதால் பலருக்கும் கணினியை எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஆனால் அதே வேளையில் இந்த அம்புக்குறி வடிவில் இருக்கும் பாயிண்டர் சற்று இடது பக்கம் சரிந்தபடி தான் இருக்கும். இந்த பாயிண்டர் இப்படி வளைந்திருக்கும் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டது ஏன் என்று கேட்டால் நிச்சயம் பலருக்கும் பதில் தெரியாது தான். அதன் பின்னணி என்ன என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
முதல் முறையாக மவுசை கண்டுபிடித்தவர் டக்லஸ் எங்கல்பர்ட் (Douglas Engelbart) என்பவர் தான். 1963 ஆம் ஆண்டு இவர் மவுஸை கண்டுபிடித்த நிலையில், 5 ஆண்டுகள் கழித்து அதாவது 1968 ஆம் ஆண்டு இதனை பயன்படுத்தி பார்த்துள்ளனர். அப்போது கருப்பு நிறத்தில் இந்த மவுஸ் பாயிண்டர் நேராக இருக்க, அந்த காலத்தில் கருப்பு நிற எழுத்துக்கு நடுவே இதுவும் ஒரு எழுத்து போல தோன்றியுள்ளது.
அந்த காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாததால் கருப்பு நிறத்தில் அனைத்து எழுத்துக்களும் இருக்க, இந்த மவுஸ் பாய்ண்டரும் கருப்பு நிறத்தில் நேராக இருந்ததால் பார்ப்பவர்களுக்கு அது எழுத்தா இல்லையா என்ற குழப்பமும் உருவாகியுள்ளது.
இதனால் மற்ற எழுத்தில் இருந்து வேறுபட்டு தெரிவதற்காக தான் இடது பக்கம் ஒரு 45° அந்த மவுஸ் பாயிண்டர் சரிந்திருப்பது போல வடிவமைத்துள்ளனர். எந்த எழுத்துக்களும் இந்த வடிவத்தில் இல்லாததால் மவுஸ் பாயிண்டர் எங்கே என்பது கண்டுபிடிப்பதும் எளிதாக இருந்ததுடன் மட்டுமில்லாமல் ஆட்காட்டி விரலைப் போலவும் அதனை வடிவமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.