எலான் மஸ்கின் xAI நிறுவனம், தனது செயற்கை நுண்ணறிவு அம்சமான Grok 4 மற்றும் Grok 4 Heavy ஐ வெளியிட்டுள்ளது. OpenAI இன் GPT-5 மற்றும் கூகிளின் ஜெமினிக்கு சவால் விடுவதே இதன் முக்கிய நோக்கம். மஸ்க் “பிக்பேங் நுண்ணறிவு” (Big Bang Intelligence) என்று அழைக்கும் அடுத்த பாய்ச்சலாக கருதப்படும் இந்த புதிய அம்சம், பகுத்தறிவு, நிகழ்நேர இணைய அணுகல், நகைச்சுவை புரிதல் மற்றும் மென்பொருள் மேம்பாடு ஆகியவற்றில் அதிநவீன திறன்களை வழங்குவதாக உறுதியளிக்கின்றன.
Grok 4 ஐ தனித்துவமாக்குவது எது, ஏன் இது முக்கியம் என்பதை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
Grok 4 என்பது xAI இன் சமீபத்திய செயற்கை நுண்ணறிவின் முக்கிய வெளியீடாகும். ஜூலை 9ஆம் தேதி அன்று தொடங்கப்பட்ட Grok 4, செயல்திறனில் மட்டுமல்லாமல், தத்துவத்திலும் ஒரு மேம்பாட்டை குறிக்கிறது. முந்தைய Grok பதிப்புகள் எதிர்கொண்ட சில சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு பொருப்பான நுண்ணறிவுடன் இருப்பதாக இதை பயன்படுத்தியவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
“எனது அனுபவத்தில், இணையத்திலோ அல்லது புத்தகங்களிலோ எங்கும் காண முடியாத கடினமான, உலக பொறியியல் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஒரே அம்சம் Grok 4 தான்’ என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Grok 4 இன் தனித்துவமான அம்சங்கள் என்னவெனில் DeepSearch என்பது தான். Grok 4 இல் DeepSearch எனப்படும் நிகழ்நேர இணைய தேடல் அம்சம் உள்ளது. இது ஆன்லைன் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் பயனர்களுக்கு அவ்வப்போது நிகழும் லைவ் தகவல்களை வழங்குகிறது. செய்தி சுருக்கங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது.
மேலும் மீம்கள் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட Grok 4, வெறும் உண்மைகளை மட்டும் இல்லாமல், தொடர்புடைய பதில்களை வழங்குப்ச்ய்ஹில் நோக்கமாக கொண்டுள்ளது. இது குறிப்பாக Gen Z மற்றும் இளம் பயனர்களுக்கு ஈர்க்கக்கூடிய ஒரு திட்டமிட்ட பரிணாம வளர்ச்சியாகும்.
Grok 4 டெக்ஸ்ட் மற்றும் படங்களை ஒரே நேரத்தில் தரும் என்பது மட்டுமின்றி வீடியோ அம்சமும் விரைவில் வரவிருப்பதாகவும் இது கல்வி மற்றும் சமூக ஊடகங்களில் பயன்பாட்டுக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
Grok 4 மனிதனின் இயற்கை ஒலி குரல் போல் பதில்களை தருகிறது. எனவே ஒரு மெஷினுடன் பேசுகிறோம் என்ற எண்ணம் இல்லாமல் ஒரு சக மனிதனுடன் பேசுகிறோம் என்ற எண்ணம் உருவாகும்.
Grok 4 Code உடன், டெவலப்பர்கள் GitHub Copilot அல்லது OpenAI இன் Code Interpreter போன்ற ஒரு சக்திவாய்ந்த AI குறியீட்டு உதவியாளரை பெறுகிறார்கள். இது குறியீட்டை எழுதவும், பிழைகளை கண்டறியவும், விளக்கவும் முடியும். இது மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் தரவு விஞ்ஞானிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
மேலும் xAI இன் கொலோசஸ் சூப்பர் கம்ப்யூட்டர் இல் கட்டமைக்கப்பட்ட Grok 4, அறிவியல் பகுத்தறிவு, சிக்கலான பிரச்சனைகளை தீர்ப்பது மற்றும் தர்க்கரீதியான அனுமானம் ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இது பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சிறப்பாக செயல்படுவதாக கூறபடுகிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த Grok 4 மாதம் $30 என்ற விலையில் கிடைக்கிறது. SuperGrok Heavy எனப்படும் Grok 4 Heavy மாதத்திற்கு $300 க்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
