நீங்கள் இதுவரை கற்பனை செய்திராத பல வேலைகளை AI கருவிகள் மிக எளிதாக செய்ய தொடங்கிவிட்டன. ஆனால், Google-இன் “Nano Banana” என்ற புதிய தொழில்நுட்பம், டிஜிட்டல் உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது வெறும் படங்களை உருவாக்குவது மட்டுமல்ல, போட்டோஷாப் போன்ற தொழில்முறை மென்பொருள்கள் இனி நமக்கு தேவை இல்லை என்று சொல்லும் அளவுக்கு மிரள வைக்கிறது. இந்த புதிய மாயவித்தையின் பின்னணியில் என்ன இருக்கிறது, அது என்னவெல்லாம் செய்யும், நாம் அதை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்ப்போம்.
ஒரு படத்திலிருக்கும் பொருளை நீக்க, அல்லது புதிய பொருளை சேர்க்க போட்டோஷாப்பில் பல மணிநேரம் மெனக்கெட வேண்டும். ஆனால் Nano Banana-வை பொறுத்தவரை, அது ஒரு நொடியில் நடக்கும் வித்தை. உதாரணமாக, நீங்கள் ஒரு படத்தில் கையில் ஒரு பழத்தை வைத்துக்கொண்டு நிற்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதே சமயத்தில், வேறொரு படத்தில் ஒரு காதணி பெட்டி இருக்கிறது. இப்போது அந்த பழத்திற்கு பதிலாக காதணி பெட்டியை வைக்க வேண்டும். அதுவும், ஒரிஜினல் படத்தின் வெளிச்சம், முகம், அனைத்தும் அப்படியே மாறாமல் இருக்க வேண்டும். இதுதான் Nano Banana-வின் சிறப்பு. இரண்டையும் அதற்குள்ளே போட்டு, “பழத்திற்கு பதிலாக காதணி பெட்டியை வை” என்று சொன்னால் போதும், நொடியில் அது நடந்துவிடும். இது மிகவும் துல்லியமாகவும், நிஜமாகவே அங்கு நடந்தது போலவும் தோற்றமளிக்கிறது.
Nano Banana-வின் மற்றொரு ஆச்சரியமான அம்சம், ஒரு புகைப்படத்தை வைத்து அதை வேறொரு கோணத்தில் உருவாக்குவது. ஒரு பையின் முன்பக்க படம் உங்களிடம் இருந்தால், அதை பார்த்துக்கொண்டு “இந்தப் பையின் பக்கவாட்டு படத்தைக் காட்டு” என்று கேட்டால், அதுவே ஒரு புதிய படத்தை, நிழல், வெளிச்சம் என அனைத்தும் துல்லியமாக உருவாக்குகிறது. இது போன்ற விஷயங்கள் இதுவரை தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாதவை.
இன்னும் ஒரு படி மேலே சென்று, Google Maps-ல் ஒரு இடத்தை மார்க் செய்து, “நான் இந்த இடத்தில் நின்று பார்த்தால் காட்சி எப்படி இருக்கும்?” என்று கேட்டால், அதற்கான ஒரு புதிய புகைப்படத்தையும் இது உருவாக்கும். இது கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய காட்சியை காட்டி மிரட்டுகிறது.
ஒரே நேரத்தில் பல படங்களை இணைத்து ஒரு புதிய படமாக மாற்றுவதுதான் இதன் மிகப்பெரிய சாதனை. ஒரு மனிதன், ஒரு பை, ஒரு சிப் பாக்கெட் என பல பொருட்களின் படங்களை அதற்குள் போட்டு, “இவை அனைத்தும் ஒரு பீச்சில் இருக்கும்படி உருவாக்கு” என்று சொன்னால், நிஜமாகவே அந்த பொருட்களோடு ஒரு புதிய படம் உருவாகிறது. அது பார்ப்பதற்கு மிகவும் நம்பகத்தன்மையுடன் இருக்கிறது. நீங்கள் ஒரு பிசினஸ்மேனாக இருந்தால், உங்களின் அனைத்து பொருட்களையும் ஒரே விளம்பரப் படத்தில் வைக்க இது ஒரு சிறந்த வழி.
ஒரு படத்தில் உங்கள் முகபாவனை மாறாமல், உங்களுக்கு ஒரு மீசை வைக்க வேண்டுமென்றால், அதைக்கூட Nano Banana செய்கிறது. “இந்த முகத்திற்கு ஒரு மீசை சேர்” என்று சொன்னால் போதும், படம் வெப்ப பின்னணியில் இருக்க வேண்டுமா, குளிர்ச்சி பின்னணியில் இருக்க வேண்டுமா என நாம் கொடுக்கும் எந்த கட்டளையையும் இது செயல்படுத்துகிறது. இது மிகவும் எளிமையான செயல்.
எந்த தொழில்நுட்பமாக இருந்தாலும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். குறைகளே இல்லாத தொழில்நுட்பம் உலகில் இல்லை. அந்த வகையில் இந்த தொழில்நுட்பம் மிகவும் அற்புதமாக இருந்தாலும், சில குறைபாடுகளும் இருக்கின்றன. நாம் சொன்னதை அப்படியே இது எப்போதும் செய்வதில்லை. உதாரணமாக, “படத்தை 90 டிகிரி திருப்பு” என்று சொன்னால், சில நேரங்களில் அது சரியாக நடக்காது. மேலும், சில சமயங்களில், இது சரியான நபரை சேரி அல்லது பொருளை சேர் என்று சொன்னால் அது சேர்க்க தவறுகிறது. அதனால் மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். இதுபோன்ற நேரங்களில் போட்டோஷாப் போன்ற மென்பொருளுக்கு சென்றுவிடுவோமா என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
Google-இன் Nano Banana, வெறும் ஒரு கருவி மட்டுமல்ல, அது எதிர்காலத்தின் ஒரு சின்னமாக பார்க்கப்படுகிறது. இது AI மூலம் படங்களை திருத்துவதிலும், உருவாக்குவதிலும் ஒரு பெரிய பாய்ச்சலை காட்டியுள்ளது. இன்னும் சில வருடங்களில் இது முழுமையாக வளர்ச்சியடையும்போது, நம் கற்பனையில் உள்ள அனைத்தையும் ஒரு வரியில் படமாக மாற்றுவது சாத்தியமாகலாம். எது எப்படியோ, இந்த தொழில்நுட்பம் நமது படைப்புத்திறனுக்கான புதிய கதவுகளை திறந்துவிட்டிருக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
