கடந்த சில ஆண்டுகளாக, செயற்கை நுண்ணறிவு என்ற ஏஐ துறை மிகப் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது. சாட் ஜிபிடிக்கு போட்டியாக ஜெமினி என்ற ஏஐ சாட்போட்டை கூகுள் உருவாக்கினாலும், அது பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சீனாவைச் சேர்ந்த டீப்சீக், மோனிகா போன்ற ஏஐ சாட் போட்கள் முன்னணியில் இருக்கும் நிலையில், ஜெமினி அதன் பக்கத்திற்கே கூட போட்டியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து, மாத்தி யோசித்த கூகுள் தற்போது ரோபோ துறையில் காலடி வைத்துள்ளது. ஜெமினி 2.0 உதவியுடன் புதிய ஏஐ ரோபோட் மாடல் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், விஷன்-லாங்குவேஜ்-ஆக்ஷன் (VLA) திறன்களையும் “எம்பாடிட் ரீசனிங் (ER) செயல்பாடு ஆகியவற்றைக் கொண்டு ரோபோட்கள் உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த ரோபோக்கள் மிகவும் சிக்கலான உடல் பணிகளை கூட மேற்கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
அதாவது மனிதர்களால் மட்டுமே மிகவும் நுட்பமாக செய்யக்கூடிய ஒரிகாமி மடிப்பு போன்ற அலங்கார காகிதங்களை கூட இந்த ரோபோட் செய்து விடும் என்றும், மிகக் கச்சிதமாக முடிப்பதாகவும் கூறப்படுகிறது. அதே போல், பொருட்களை பையில் போடுதல் உள்ளிட்ட மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் இந்த ரோபோட்கள் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அதிக செயல்திறனை கொண்டுள்ள இந்த ரோபோட் பல மொழிகளை புரிந்து கொள்ளும் என்றும், இயற்கை மொழிகளையும், சைகைகளையும் புரிந்து கொண்டு, சூழ்நிலைக்கு ஏற்ப தனது செயல்பாடுகளை தானாகவே மாற்றும் என்றும் கூறப்படுகிறது.
நிலை மதிப்பீடு செய்தல், இடப்பெயர்ச்சி செய்தல், பொருள்களை கையாளுதல், தானாகவே கட்டுப்பாட்டு குறியீடுகளை உருவாக்கி கச்சிதமான வேலைகளை முடித்தல் உள்ளிட்ட பல திறன்களை இந்த கூகுள் ஜெமினி ரோபோட் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக, கூகுள் நிறுவனம் Apptronik என்ற நிறுவனத்துடன் இணைந்துள்ளதாகவும், இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து ரோபோட் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.