பிரபல செயற்கை நுண்ணறிவு செயலியான OpenAI-ன் ChatGPT, இன்று திடீரென செயலிழந்ததால், உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முடக்கம் காரணமாக, சேவைகளை பெற முடியாமல் பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
செயலிழப்பை கண்காணிக்கும் Downdetector இணையதளத்தின்படி, மதியம் வேளையில் 80%க்கும் அதிகமான புகார்கள் ChatGPT தொடர்பாகவே பதிவாகின. இது வழக்கமான புகார்களைவிட மிக மிக அதிகம் ஆகும்.
பயனர்கள் அனுப்பும் கேள்விகளுக்கு ChatGPT எந்த பதிலையும் அளிக்கவில்லை. சில சமயங்களில் உரையாடலின் பாதியிலேயே சேவை நின்றுவிட்டதாகவும் பலர் புகார் தெரிவித்தனர்.
OpenAI நிறுவனம் இந்த பிரச்சினையை உறுதி செய்தது. “ChatGPT பதில்களை காண்பிக்கவில்லை. இந்த சேவைக்கான சிக்கலை நாங்கள் விசாரித்து வருகிறோம்,” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செயலிழப்பு உலக அளவில் ஏற்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், சமூக வலைத்தளங்கள் மற்றும் Downdetector தளத்தின் பதிவுகளின்படி, பல பகுதிகளில் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ChatGPT பாதிக்கப்பட்டபோதும், OpenAI-ன் மற்ற சேவைகளான API, Playground மற்றும் Sora ஆகியவை தொடர்ந்து இயங்கி வருகின்றன.
ChatGPT செயலிழப்பு காரணமாக, கூகிள் ஜெமினி போன்ற மற்ற செயற்கை நுண்ணறிவு சேவைகளை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த செயலிழப்புக்கான காரணம் மற்றும் அது எப்போது சரிசெய்யப்படும் என்பது குறித்து OpenAI இதுவரை எந்தத்தகவலையும் வெளியிடவில்லை. ChatGPT கல்வி முதல் தொழில்முறை பயன்பாடுகள் வரை பல துறைகளில் பயன்படுத்தப்படுவதால், இதுபோன்ற குறுகிய கால செயலிழப்புகள்கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
