உலகின் முன்னணி ஏஐ தொழில்நுட்பமான ChatGPT நேற்று திடீரென சில மணி நேரங்கள் முடங்கியது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக கருத்துகள் பதிவாகி வருகின்றன. பலரும், “யானைக்கும் அடி சறுக்கும்” என குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகில் எத்தனை தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், இன்னும் ChatGPTயை அதிகமான நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாதாரண மக்களிலிருந்து டெவலப்பர்கள் வரை அனைவருக்கும் ChatGPTமிகவும் உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ChatGPT 4.0 பல முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு மேல் திடீரென ChatGPT செயல்படவில்லை என சமூக வலைதளங்களில் பலர் புகார் தெரிவித்தனர். மேலும், “டவுன் டிடெக்டர்” போன்ற தளங்களில் ஏராளமான நபர்கள், ChatGPT தங்களுக்குப் செயல்படவில்லை என்று புகார் பதிவு செய்தனர்.
இந்தியாவின் சில பகுதிகள் உட்பட, உலகம் முழுவதும் சில மணி நேரம் ChatGPT முடங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என கூறப்பட்டது. அதன் பின், ChatGPT மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இருப்பினும், ஓபன் ஏஐ நிறுவனம் இதுகுறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது சர்வர் கோளாறு அல்லது தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் என கூறப்பட்டாலும், இதன் பின்னணி குறித்து சரியான தகவல் வெளிவரவில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
