அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு பின்னர் இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்ப தளங்களுக்கு ஆதரவு பெருகி வரும் இந்த சூழலில், Zoho நிறுவனத்தின் மெசேஜிங் செயலியான ‘அரட்டை’ அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. தினசரிப் பதிவுகள் 100 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், Zohoவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மணி வேம்பு அவர்கள், சமீபத்தில் அளித்த சிறப்பு நேர்காணலில் இந்த பெரும் எழுச்சி மற்றும் சவால்கள் குறித்து பேசியுள்ளார்.
செப்டம்பர் மாதத்தில் ‘அரட்டை’க்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத வளர்ச்சி குறித்து பேசிய மணி வேம்பு, இது உண்மையில் ஒரு ஆச்சரியம் என்று குறிப்பிட்டார்.
“நாங்கள் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அரசாங்கத்துடன் சில பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், மத்திய அமைச்சர்களின் ட்வீட் மூலம் Zohoக்கு கிடைத்த அங்கீகாரம் எங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. அந்த ட்வீட் Zoho தளங்களுக்கு பெரிய அளவிலான பயனர் வருகை கொடுத்தது. ஆனால், ‘அரட்டை’க்கு கிடைத்த எழுச்சி இன்னும் பெரிய ஆச்சரியம்,” என்று அவர் கூறினார்.
‘அரட்டை’ 2021-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்தாலும், சமீபத்திய வளர்ச்சி அபரிமிதமானது. இதுகுறித்து மணி வேம்பு மேலும் கூறுகையில், “ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டியது போல, ஒரு நாளைக்கு 3,500 ஆக இருந்த புதிய பதிவுகள், ஒரே நாளில் 3,50,000-ஐ எட்டியது. அடுத்த நாளில் அது மில்லியனைத் தாண்டியது. இன்றும் ஒரு நாளைக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுகள் தொடர்ந்து வருகின்றன. இது ஒரு மிகப்பெரிய மற்றும் திடீர் எழுச்சி,” என்று தெரிவித்தார். மேலும் தற்போது Zoho செயலி ஒரு கோடிக்கும் அதிகமான டவுன்லோடுகளை பெற்றுவிட்டது.
“நாங்கள் பொறியியல் ரீதியாகவும், உள்கட்டமைப்பு ரீதியாகவும் தயாராக இருந்தோம். ஆனால், திடீரென இந்த எழுச்சி வந்ததால், எங்களது உள்கட்டமைப்பு விரிவாக்கத்தை அவசர கதியில் மேற்கொள்ள வேண்டியிருந்தது. ‘அரட்டை’க்கான கட்டமைப்பு தேவைகளை முன்னுரிமை கொடுத்துப் பூர்த்தி செய்தோம்,” என்று மணி வேம்பு விளக்கினார்.
இந்த திடீர் வளர்ச்சிக்கு பின்னணியில் இருந்த முக்கியமான காரணிகள் குறித்து பேசும்போது, அவர் இரண்டு விஷயங்களைச் சுட்டிக்காட்டினார்: ஒன்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சரின் ட்வீட். அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் Zohoவின் குறித்து ட்வீட் செய்தது, Zoho Office Suite, Workplace, மற்றும் Email ஆகியவற்றை பற்றி இந்திய வாடிக்கையாளர்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மந்திர பிரதான் அவர்கள் ‘அரட்டை’ செயலியை பயன்படுத்தி பாராட்டி ட்வீட் செய்தது, இந்த செயலிக்கு ஒரு புயல் வேகத்தில் வளர்ச்சியை அளித்தது.
“இத்தகைய உயர்மட்ட அங்கீகாரம் எங்களுக்கு கிடைத்ததில் பெருமை. அதிர்ஷ்டவசமாக, எங்களால் இந்த தேவைக்கேற்ப உள்கட்டமைப்பை விரைந்து விரிவாக்க முடிந்தது,” என்று மணி வேம்பு முடித்தார்.
தனியுரிமைக்கு முக்கியத்துவம், எளிமையான இன்டர்ஃபேஸ் மற்றும் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ என்ற முத்திரை ஆகியவை ‘அரட்டை’ செயலியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
