’அரட்டை’க்கு கிடைக்கும் அமோக வரவேற்பு.. இந்திய சுதேசி செயலி ‘வாட்ஸ் அப்’ செயலியை பின்னுக்கு தள்ளுமா? பயனர்களின் அனுபவங்கள் என்ன? இன்னும் மேம்படுத்த என்னென்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் ‘சுதேசி’ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்திய மென்பொருள் நிறுவனமான ஜோஹோ உருவாக்கிய ‘அரட்டை’ என்ற மெசேஜிங் செயலி, இந்தியாவின் ஆப் ஸ்டோர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.…

arattai 1

இந்தியாவில் ‘சுதேசி’ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்திய மென்பொருள் நிறுவனமான ஜோஹோ உருவாக்கிய ‘அரட்டை’ என்ற மெசேஜிங் செயலி, இந்தியாவின் ஆப் ஸ்டோர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் முதலிடத்தில் இருந்த வாட்ஸ்அப் இப்போது ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

‘அரட்டை’ என்றால் தமிழில் ஒருவருக்கொருவர் சாதாரணமாக பேசி கொள்வது என்று பொருள். இது 2021 இல் தொடங்கப்பட்டது. இது வாட்ஸ்அப் போன்றே தனிநபர் மற்றும் குழு அரட்டைகள், வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள், மீடியா பகிர்வு மற்றும் சேனல்களை வழங்குகிறது.

ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீராமுவின் கூற்றுப்படி, அரட்டையின் பயனர் எண்ணிக்கை வெறும் 3 நாட்களில் 100 மடங்கு அதிகரித்துள்ளது. தினசரி பதிவு எண்ணிக்கை 3,000-லிருந்து 3.5 லட்சமாக உயர்ந்துள்ளது.

மத்திய அமைச்சர்களான பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் ஆகியோர் ‘அரட்டை’ போன்ற உள்நாட்டு செயலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து இந்த வளர்ச்சி ஏற்பட்டது. இது பாதுகாப்பானது, இலவசமானது, மற்றும் பயன்படுத்த எளிதானது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரட்டையின் இந்த திடீர் வளர்ச்சி சில சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது. பயனர்களுக்கு OTP சரிபார்ப்பு மற்றும் தொடர்புகளை ஒத்திசைப்பதில் தாமதம் போன்ற உள்கட்டமைப்பு சிக்கல்களை ஜோஹோ எதிர்கொண்டுள்ளது. ஆனாலும், அஸ்வினி வைஷ்ணவ், ஜோஹோ தனது உள்கட்டமைப்பை விரிவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வாட்ஸ்அப் ஒரு பெரிய ஆதிக்கம் செலுத்தும் செயலியாக மாறியுள்ளதால், அதை எதிர்கொள்வது அரட்டைக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். இருப்பினும், பயனர்களின் தரவு பாதுகாப்பு குறித்து அதிகரித்து வரும் கவலைகள், அரட்டையின் தனிநபர் பாதுகாப்பு உறுதிமொழிகளை வலுவாக முன்வைக்கின்றன. இந்த செயலியின் அழைப்புகளுக்கான எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அரட்டைக்கான என்கிரிப்ஷனும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் டிரம்ப் ஆட்சியில் இருந்து வரும் சுங்கவரி மற்றும் H1B விசா போன்ற சிக்கல்கள், இந்தியாவை தற்சார்பு நோக்கித் தள்ளியுள்ளன. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் அலுவலக செயலிகளை விட்டுவிட்டு, ஜோஹோ ஆஃபீஸ் தொகுப்புக்கு மாறியிருப்பதாக கூறியது, உள்நாட்டு தொழில்நுட்பத்திற்கு அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை காட்டுகிறது. இந்தியா இப்போது எதிர்வினையாற்றுவதை விடுத்து, தன் பாதையை மறுசீரமைத்து வருகிறது.

‘அரட்டை’ செயலியை பயன்படுத்தும் இந்தியர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். இதை படிக்கும்போது நாமும் அரட்டையின் ஒரு பங்காக வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு ஏற்படுகிறது. ஒரு பயனர் “நாங்கள் ‘மேட் இன் இந்தியா’ திட்டத்திற்கு முழு ஆதரவு தருகிறோம். இந்த செயலி மேலும் பிரபலமடைய நாங்கள் நிச்சயம் உதவுவோம். ஆனால், முதலில் ஒரு தொடர்பை சேர்ப்பது அல்லது ஒத்திசைப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஒருவருக்கு எப்படி செய்தி அனுப்புவது என்றே தெரியவில்லை. ஏனெனில், இந்த செயலில் பல பிழைகள் உள்ளன, இது பயனர் அனுபவத்தை கடுமையாகப் பாதிக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னொரு பயனர் “செயலி சிறப்பாக உள்ளது. சில அப்டேட்டுகள் தேவை, ஆனால் சரியான திசையில் செல்கிறது. சுயவிவர படத்தை சேர்க்க முயற்சிக்கும்போது, ‘புகைப்படம் எடு’ மற்றும் ‘கேலரியில் இருந்து தேர்வு செய்’ என இரண்டு விருப்பங்கள் வருகின்றன. ‘கேலரியில் இருந்து தேர்வு செய்’ என்பதை தேர்ந்தெடுத்தால், அது சமீபத்திய படங்களை மட்டுமே காட்டுகிறது. ஒரு பழைய படத்தை தேட வேண்டுமென்றால், நிறைய ஸ்க்ரோல் செய்ய வேண்டும். இதற்கு பதிலாக, புகைப்பட ஃபோல்டர்களை அணுகும் வசதியை வழங்கலாம்” என்று மற்றொரு பயனர் ஆலோசனை கூறியுள்ளார்.

மற்றொரு பயனர் “இந்தச் செயலியின் பயன்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனால், இதன் பெயரில் ஒரு சிக்கல் உள்ளது. ‘அரட்டை’ என்ற பெயரின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்கிறேன். இருந்தாலும், இது உச்சரிக்க சற்று கடினமாக உள்ளது. ஒரு மெசேஜிங் செயலியை பற்றி மற்றவர்களிடம் பரிந்துரைக்கும்போது, பெயரை அடிக்கடி உச்சரிக்க வேண்டி வரும். செயலியின் எளிமையான உச்சரிப்பும், பிரபல்யமும் அவசியம். தயவுசெய்து இதை பற்றி யோசியுங்கள்” என்று ஒருவர் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

businessline ஊடகத்தின் ஆய்வின்படி ‘அரட்டை’ செயலியின் பதிவிறக்கங்கள் மற்றும் தினசரி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் வாரத்திற்கு வாரம் முறையே 185 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது ஒவ்வொரு வாரமும் சுமார் 40 மடங்கு பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி, செப்டம்பர் 21 முதல் 27 வரையிலான காலகட்டத்தில், அரசாங்க பிரதிநிதிகள் இந்த செயலிக்கு ஆதரவு தெரிவித்ததால் ஏற்பட்டது.

அரட்டைக்கான அப்டேட்டுக்கள் அவ்வப்போது செய்து, பயனர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் அரட்டை நிச்சயம் இந்திய அளவில் ஒரு மாபெரும் செயலியாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.