இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிக வரி விதித்துள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியா மற்றும் சீனாவில் உள்ள தனது நிறுவனங்களின் உற்பத்தியை குறைத்துவிட்டு, பிரேசிலில் புதிய யூனிட்டை தொடங்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 34% வரியும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26% வரியும் விதித்துள்ள நிலையில், இந்த இரண்டு நாடுகளில் ஐபோன் அசெம்பிளி செயல்பாடுகள் அதிகமாக இருப்பதை கணக்கில் கொண்டு இனி ஆப்பிள் நிறுவனம் உற்பத்தியை குறைக்கவிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கு பதிலாக, பிரேசில் நாட்டில் ஆப்பிள் ஐபோனுக்கான அசெம்பிளி யூனிட்டுகள் தொடங்கப்பட உள்ளதாகவும், பிரேசிலில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வெறும் 10% வரி மட்டுமே இருப்பதால், ஆப்பிள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே பிரேசிலில் ஐபோன் உதிரி பாகங்களை தயாரிக்கும் யூனிட்டுகள் இருந்தாலும், அவை பெரும்பாலும் உள்ளூர் வர்த்தகத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இனிமேல், அதிக அளவில் பிரேசிலில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி அதிகரித்திருந்த நிலையில், புதிய வரிகள் காரணமாக பிரேசிலுக்கு “ஜாக்பாட்” கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.