AI என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி காரணமாக பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் AI தொழில்நுட்ப வல்லுனர்களை ஆப்பிள் நிறுவனம் வேலைக்கு எடுக்க இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Pocket-lint என்ற நிறுவனத்தின் அறிக்கையின்படி ஆப்பிள் நிறுவனத்தின், Siri, iOS, macOS மற்றும் பிற தயாரிப்புகள் பணிபுரிய AI மற்றும் இயந்திர கற்றல் அறிவு கொண்ட கிட்டத்தட்ட 180 பேரை ஆப்பிள் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக AI வல்லுனர்களை ஆப்பிள் நிறுவனம் தேடுகிறது.
AI செயலாக்கம், கணினி பார்வை மற்றும் இயந்திர கற்றல் உள்ளிட்ட பல்வேறு AI தொடர்பான துறைகளில் நிபுணத்துவம் பெற்ற விண்ணப்பதாரர்களைத் தேடுவதாக ஆப்பிள் இணையதளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டால் மற்ற ஆப்பிள் நிறுவன ஊழியர்களின் வேலை பறிபோகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆப்பிள் தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்த AI தொழில்நுட்பத்தில் அதிகளவில் முதலீடுகளைச் செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது. கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் அமேசான் அலெக்சா போன்ற அதன் போட்டியாளர்களை விட Siri, குறைந்த திறன் கொண்டதாக நீண்ட காலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. எனவே சிறந்த AI திறமையாளர்களை பணியமர்த்துவதன் மூலம், ஆப்பிள் இதை சரி செய்ய முடியும் என்று நம்புகிறது.
ஜெனரேட்டிவ் AI என்பது AI ஆராய்ச்சியின் நம்பிக்கைக்குரிய ஒரு அம்சம் ஆகும். யதார்த்தமான உரை, படங்கள் மற்றும் ஆடியோவை உருவாக்க ஜெனரேடிவ் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம். Siriயின் இயல்பான மொழியைப் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்தவும், ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை உருவாக்கவும், சரியான அளவில் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் இது பயன்படுத்தப்படலாம்.
இந்த பணியமர்த்தல் முயற்சிகளின் விளைவாக ஆப்பிள் Siriயில் என்ன குறிப்பிட்ட மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும், AIக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பு, வரும் ஆண்டுகளில் Siri வளர்ச்சியின் முக்கிய மையமாக இருக்கும் என்று கூறுகிறது.