நெட்பிளிக்ஸ் தன் செயலியில் உள்ள தற்போதைய தேடல் வசதிக்கு பதிலாக, புதிய AI அடிப்படையிலான தேடல் வசதியை சோதனை செய்து வருகிறது என்று கூறப்படுகிறது. இந்த புதிய தேடல் வசதியானது, பயனர்களுக்கு சூப்பர் அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த AI வசதி தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, ஆனால் இதை விரைவில் பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்த கூடிய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த AI தேடல் OpenAI-யின் AI மாடல்களின் உதவியுடன் செயல்படுகிறது. எந்த மாடல் என்பது குறிப்பிடப்படவில்லை என்றாலும், இது பயனர்களை உரிய திரைப்படங்கள் மற்றும் சீரியல்களை ஒரு சில நொடிகளில் கண்டுபிடிக்க உதவுகிறது.
இந்த AI தேடல், திரைப்படத்தின் பெயர், வகை அல்லது நடிகர்கள் மட்டுமல்லாமல், பயனரின் உணர்வுகள் அல்லது மனநிலை அடிப்படையிலும் உள்ளடக்கங்களை தேட உதவுகிறது.
உதாரணமாக ஒருவர் ஆக்சன் படங்கள் என்று தேடினால், அதிரடி ஆக்சன் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் பரிந்துரைக்கப்படும். காமெடி தொடர்கள் வேண்டும் என்றால், நகைச்சுவை சீரியல்கள் பரிந்துரைக்கப்படும்.
இந்த வசதி தற்போது iOS செயலியில் மட்டும் கிடைக்கிறது. இதுகுறித்து நெட்பிளிக்ஸ் செய்தி தொடர்பாளர் MoMo Zhou கூறியதின்படி, தற்போது இந்த வசதியை iOS தாண்டி மற்ற வகைகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் இல்லை என்று கூறினார்..
மேலும், இம்மாத தொடக்கத்தில் நெட்பிளிக்ஸ் தனது டிவி செயலியை பல மொழிகளில் ஒலி ஆதரவு கொண்டதாக புதுப்பித்துள்ளது. இதன் மூலம், பயனர்கள் பல்வேறு மொழிகளில் உள்ள உள்ளடக்கங்களை பார்த்து அனுபவிக்க முடிகிறது.
இந்த புதிய AI தேடல் வசதி அமெரிக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் விரைவில் அறிமுகமாகலாம் என்று கூறப்பட்டாலும், இந்தியாவில் இது எப்போது வரும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. பயனர்கள் அளித்த கோரிக்கைகளின் அடிப்படையில் நெட்பிளிக்ஸ் தற்போது AI தேடல் வசதியில் மேலும் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.