சென்னை : பிரபல யூடியூபர் இர்பான் பதிவிட்டுள்ள புதிய வீடியோவால் மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. பிரபலமான ஹோட்டல்கள், உணவுவகைகளை சாப்பிட்டு ரிவ்வியூ செய்து அதனை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றி புகழ் பெற்றவர் இர்பான். இதன் மூலம் இவருக்கு லட்சக்கணக்கில் சப்ஸ்கிரைபர்கள் பெருகினர். மேலும் இர்பானின் புகழும் மெல்ல பரவியது. இதன் மூலம் திரைப்பிரபலங்கள், அரசியல், சமூகப் பிரபலங்களுடன் Food Vlog எடுப்பது, சமைப்பது என படு பிஸியாக இருக்கிறார் இர்பான்.
இதனிடையே அவருக்குக் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. மேலும் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் அவரது மனைவி கர்ப்பம் தரித்த போது பிறக்கப் போகும் குழந்தை என்ன பாலினம் என்பதை அறிவித்தார். துபாயில் ஸ்கேன் செய்து அறிவித்ததால் இந்திய சட்டப்படி அவர்மேல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் இந்தியாவில் கருவுற்ற பெண்ணின் குழந்தையின் பாலினத்தை அறிவிப்பது குற்றம் என்பதால் அவருக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தது. இந்நிலையில் அவர் மன்னிப்புக் கேட்டதால் அவர் மீதான வழக்கு நடவடிக்கை கைவிடப்பட்டது.
16 செல்வங்கள் என்னென்ன தெரியுமா? பட்டியடிலிட்டு மணமக்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்
மேலும் கடந்த ஜுலை மாதம் இவரது மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நேரத்தில் அப்போது பிரசவ அறையில் தனது மனைவிக்கு மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை வீடியோவாகப் பதிவு செய்தார். தற்போது அதனை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் இர்பான். இதில் குழந்தை பிறந்தவுடன் தாய்க்கும், குழந்தைக்கும் உன்னத உறவான தொப்புள் கொடியை இர்பான் கத்தரிக்கோல் கொண்டு வெட்டுவது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தது.
தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பணியாளர்களே அறுவை சிகிச்சை அறைக்குள் செல்ல வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அதனை மீறி இர்பான் எப்படி உள்ளே செல்லாம் என்றும், தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயலாகவும் உள்ளது என அவருக்கு எதிராக மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.
இந்த வீடியோ தொடர்பாக தமிழ்நாடு ஊரக நலப் பணிகள் இயக்குநர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை, மருத்துவர், செவிலியர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.