சென்னை : பொதுப்போக்குவரத்தில் ரயில்களில் எப்போதுமே கூட்டம் அலைமோதும்.. நிர்ணயிக்கப்பட்ட இருக்கைகளைக் காட்டிலும் அதிக அளவு டிக்கெட் கொடுத்து ஆட்டு மந்தைகளை ஏற்றுவது போல் பொதுப்பெட்டிகளில் அடைத்து வைத்தாற்போல பயணிகள் பயணிப்பது வாடிக்கையாகி வருகிறது. அவ்வாறு பயணிக்கும் போது பாதுகாப்பற்ற முறையிலும், படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டே பயணிக்கின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் நேற்று வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணித்த போது பிளாட்பார்ம்-ல் கால் இடறி தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு மீண்டும் ரயில்பெட்டிகளுக்கு நடுவே சிக்கி உயிரிழந்திருப்து பரிதாபத்தினை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலானது சைதாப்பேட்டை ரயில் நிலையத்தினைத் தாண்டிச் சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் பாலமுருகன் பிளாட்பார்ம்-ல் கால் இடறி தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்.
சுமார் 150 மீட்டர்தூரம் இழுத்துச் சென்ற அவர் பின் ரயில் பெட்டிக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கி உயிரிழந்தார். விபத்து நடந்துள்ள இடத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்ததால் அந்தக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல் தண்டவாளத்தில் செல்பி எடுப்பது, ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தினைக் கடப்பது, சிக்னலைக் கவனிக்காமல் இருப்பது, கால்நடைகளை தண்டவாளத்தின் அருகில் மேய்ச்சலுக்கு விடுவது போன்றவற்றால் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
ரயில்வே சட்டங்கள் கடுமையாகப் பின்பற்றப்பட்டாலும், அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பயணச்சீட்டுகளைக் கொடுப்பதும் விபத்திற்கக் காரணமாக உள்ளது. மேலும் வந்தே பாரத், மெட்ரோ போன்ற நவீன மயமாக்க ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதால் படிக்கட்டுகளில் உட்காரும் நிலை நேராது. எனவே ரயில்வே துறையினை நவீனமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.