சினிமாவைத் தாண்டி அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள நடிகர் விஜய், தனது ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சிக்காக சனிக்கிழமைகளில் மட்டுமே சுற்றுப்பயணம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார். விஜய்யின் இந்த தனித்துவமான அணுகுமுறை, ஒரு வழக்கமான அரசியல் தலைவர் செய்யாத செயல். இந்த வியூகத்திற்கு பின்னால் உள்ள நோக்கங்கள் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தனது சுற்றுப்பயணத்திற்காக வார இறுதி நாட்களைத் தேர்ந்தெடுத்ததற்கு பின்னால் உள்ள முக்கியக் காரணம், அதிக அளவிலான மக்கள் கூட்டத்தை கூட்டுவதுதான். சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால், மக்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு வருவதற்கான அவசியம் இல்லை. இதனால், மக்கள் கூட்டத்தை அதிகளவில் திரட்ட முடியும். மக்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை இது நேரடியாக வெளிப்படுத்தும்.
பெரும்பாலான அரசியல் தலைவர்கள் வார நாட்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். ஆனால், விஜய்யின் இந்த திட்டம் மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாது. மக்களை வேலை செய்ய அனுமதித்துவிட்டு, விடுமுறை நாட்களில் மட்டும் அரசியல் பணிகளில் ஈடுபடுவது, மக்களை மதிக்கும் ஒரு அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. இது, மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும்.
சனிக்கிழமை நடத்தும் கூட்டம் மற்றும் விஜய்யின் செயல்பாடுகள் ஞாயிறு அன்று ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெறும். பெரும்பாலான மக்கள் வார நாட்களில் தொலைக்காட்சியில் செய்திகளை பார்ப்பார்கள். இந்த நாட்களில் விஜய்யின் கூட்டங்கள் மற்றும் பேச்சுகள், தொலைக்காட்சி, நாளிதழ்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தலைப்பு செய்தியாக இடம்பெறும். இது, தமிழக வெற்றி கழகத்திற்கு இலவச விளம்பரமாக அமையும்.
வழக்கமாக, கட்சிக்காக பணியாற்றும் தொண்டர்கள் தங்கள் அன்றாட வேலைகளை விட்டுவிட்டு முழுநேரமும் கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும். இது அவர்களுக்கு பொருளாதார சுமையை ஏற்படுத்தும். ஆனால், விஜய்யின் இந்தத் திட்டம் தொண்டர்களின் தொழிலுக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவர்கள் வேலை நாட்களில் தங்கள் சொந்த தொழில்களில் கவனம் செலுத்தலாம், வார இறுதி நாட்களில் மட்டும் கட்சி பணிகளில் ஈடுபடலாம். இது தொண்டர்களுக்கு ஒருவித சோர்வை ஏற்படுத்தாது.
விஜய் தனது சுற்றுப்பயணங்களை, வழக்கமாக நகரங்களில் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்குப் பதிலாக, கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் நடத்த திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இது, அவரை சாமானிய மக்களிடம் நெருங்க உதவும். இந்த இரண்டு திட்டங்களும் இணைந்து, விஜய்க்கு ஒரு புதிய, நம்பிக்கை தரும் அரசியல் பாதையை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
