செந்தில் பாலாஜியின் நோக்கமே வேறு.. அடுக்கடுக்காக அமலாக்கத் துறை வாதம்

By Keerthana

Published:

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்து வருவதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி இருக்கிறது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவை பார்க்கலாம்.

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இந்த கோரிக்கையை வைத்திருப்பது செந்தில் பாலாஜி தான். அவர் சார்பில் புதிதாக மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

அதில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இதேபோல் வங்கி ஆவணங்களை கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். எனவே அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் மொத்தம் 3 புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில், வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலே இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளதால் இந்த மனுக்கள் மீது வாதிட கால அவகாசம் வழங்க கூடாது எனவும், வாதங்களை இன்றே கேட்டு முடிவு செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.