விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் அ.தி.மு.க. – பா.ஜ.க.வுடன் கூட்டணி சேராது என்றும், தனித்து போட்டியிட்டு சில தொகுதிகளில் வெற்றி பெற்று, தொங்கு சட்டமன்றம் ஏற்படும் நிலை வந்தால், அப்போது அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்து, முக்கியப் பதவிகளை பெறும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு தேர்தலை பொறுத்தவரை, தற்போதைய நிலையில் நான்கு முனை போட்டி உறுதி என்பது போலத் தெரிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சியை தவிர்த்து பார்த்தால் கூட, தி.மு.க., அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி, மற்றும் தமிழக வெற்றி கழகம் என மும்முனைப் போட்டி உறுதியாகிறது.
தி.மு.க. வலிமையான கூட்டணியாக இருந்தாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் தி.மு.க. அரசுக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக மக்கள் மாற்றி வாக்களிப்பார்கள் என்று கூறப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு அ.தி.மு.க. தொண்டர்களே இன்னும் மனதளவில் ஒப்புதல் கொடுக்காததால், அவர்கள் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளில் வேலை செய்வார்களா என்பது சந்தேகமாக உள்ளது.
இந்த நிலையில் தான், எந்த கட்சியும் கூட்டணிக்கு வராவிட்டாலும் தனித்து போட்டியிடுவது, மக்களிடம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளையும், அதன் அவலங்களையும் எடுத்துக் கூறுவது, கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்வது ஆகியவற்றின் காரணமாக விஜய்க்கு 20 முதல் 30 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், 40 முதல் 50 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள், 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடிவு தொங்கு சட்டமன்றமாக தான் இருக்கும் என்றும், மூன்று கூட்டணிக்கும் கிட்டத்தட்ட சம அளவில் தொகுதிகள் கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனர். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு கொடுக்கும் என்றும், ஆட்சியில் பங்கு கேட்கும் என்றும், துணை முதல்வர் உட்பட சில முக்கிய பதவிகளை பெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
