தமிழக அரசியல் களத்தில், நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் தற்போது சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, அவரது ‘தமிழக வெற்றிக் கழகம்’ சார்பில், வரும் வார இறுதி நாட்களில் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்வுகள், தமிழக அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.
விஜய் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். முதல் சந்திப்பு திருச்சியில் நடந்த நிலையில் இரண்டாவதாக வரும் சனிக்கிழமை, செப்டம்பர் 20ஆம் தேதி திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம், மயிலாடுதுறைக்கு செல்லவுள்ளார். இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், திருச்சியில் கூடிய மக்கள் கூட்டத்தை விட, அதிக கூட்டம் சேரும் என த.வெ.க. தொண்டர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் இந்த நகர்வுகள் திமுகவுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தலாம் என்றே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, திருவாரூர் மாவட்டம், திமுகவின் கோட்டையாகவும், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் சொந்த ஊராகவும் இருப்பதனால், அங்கு விஜய் நிகழ்த்தப்போகும் அரசியல் எழுச்சி, திமுகவுக்கு புதிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூரில் உள்ள மக்கள், விஜய்யின் வருகையை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
திருவாரூர் மற்றும் நாகையில் விஜய்யின் பேச்சு, அவரது கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை மேலும் தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தனது பேச்சின் மூலம், கூட்டணி பற்றியோ அல்லது தனித்து போட்டியிடுவது பற்றியோ ஒரு தெளிவான சமிக்ஞையை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாகப்பட்டினத்தில் ஒரு “நச் பேச்சு” இருக்கும் என்றும், இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, இந்த மூன்று மாவட்டங்களில் ஏதேனும் ஒன்றில் கூட்டம் அதிகமாக இருந்தால், ஒரு மாவட்டம் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி பொதுக்கூட்டத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, த.வெ.க. தொண்டர்கள் மிகுந்த உத்வேகத்துடன் களப்பணியாற்றி வருகின்றனர். கட்சி சார்பில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுக்கு தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமூக வலைத்தளங்களில், “வேற லெவலில்” தொண்டர்கள் வேலை செய்கிறார்கள் என்று கூறப்படுவதிலிருந்து, இந்த நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை அறியலாம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
