தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வந்து தோல்வி அடைந்த நிலையில், விஜய்க்கு மட்டும் வெற்றி கிடைக்குமா என்ற கேள்வி எழுப்புவோர்களுக்கு அரசியல் விமர்சகர்கள் சில முக்கிய காரணங்களைக் கூறுகின்றனர்.
சிவாஜி கணேசன் அரசியலுக்கு வந்தபோது, ஜானகி, ஜெயலலிதா என அதிமுக இரண்டாக பிளந்து இருந்தது. அப்போது சிவாஜி கணேசன் ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற புதிய கட்சியை ஆரம்பித்து ஜானகி பக்கம் கூட்டணி வைத்தார். அவர் மட்டும் அன்று ஜெயலலிதா அணியில் சேர்ந்திருந்தால் அரசியலில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பார். தவறான இடத்தில் சேர்ந்ததால் தான் அவர் தோல்வி அடைந்தார் என்று கூறுகின்றனர்.
அதேபோல், விஜயகாந்த் அரசியல் ஆரம்பித்த நேரம் சரியில்லாதது. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என இரண்டு ஆளுமைமிக்க தலைவர்கள் இருந்த காலகட்டத்தில் அவர் அரசியல் கட்சியை தொடங்கினார். விஜயகாந்தை ஒழிப்பதில் இருவருமே கிட்டத்தட்ட மறைமுகமாக கூட்டணி சேர்ந்தனர் என்பதும், ஒரு கட்டத்தில் விஜயகாந்த் பொறுமை இழந்து அதிமுகவுடன் கூட்டணி சேர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் என்பதும், அங்கிருந்துதான் அவரது வீழ்ச்சி தொடங்கியது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதேபோல், கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியபோது அவருக்கு மக்கள் மத்தியில் சுத்தமாக ஆதரவு இல்லை. குறிப்பாக, முதல் தலைமுறை வாக்காளர்கள், இளைய தலைமுறை வாக்காளர்கள் கமல்ஹாசனை கண்டுகொள்ளவே இல்லை. அதனால் தான் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் அவர் முதல் தேர்தலிலேயே டெபாசிட் இழந்தார்.
ஆனால், விஜய் கட்சி ஆரம்பித்த நேரம் என்பது சரியான நேரம் மற்றும் இளைஞர்களின் வாக்குகளை கையில் வைத்திருக்கும் தலைவர் என்று கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு தேர்தலை பொறுத்தவரை திமுகவில் உதயநிதி தான் முன்னிலைப்படுத்தப்படுவார். அப்போது விஜயையும் உதயநிதியையும் ஒப்பிட்டால், விஜய் எங்கேயோ போய்விடுவார் என்று தான் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றன.
அதிமுக ஓட்டு சிதைந்து கொண்டே வரும் நிலையில், அதை தூக்கி நிறுத்த எடப்பாடி பழனிசாமியால் முடியவில்லை. மேலும் பாஜகவை கூட்டணியில் சேர்த்ததால் அந்த கூட்டணியில் இணைய மற்ற கட்சிகள் தயங்கி வருகின்றன. எனவே, அதிமுகவுக்கு படிப்படியான வீழ்ச்சி தான் ஆரம்பமாகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த தேர்தல் வேண்டுமானால் அதிமுக, திமுக, தவெக என மும்முனை போட்டியாக இருக்கலாம். ஒருவேளை இந்த தேர்தலில் தவெக ஆட்சியைப் பிடிக்காவிட்டாலும், 20 முதல் 25 சதவீத வாக்குகளை பெறும் என்றும், 50 முதல் 60 தொகுதிகளை கட்டாயம் வெல்லும் என்றும், அநேகமாக எதிர்க்கட்சி வரிசையில் உட்காரலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் 2031 ஆம் ஆண்டு தேர்தல் என்பது திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையிலான போட்டியாக தான் இருக்கும் என்றும், அதிமுக படிப்படியாக கரைந்துவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஒருவேளை இந்த தேர்தலில் விஜய் வெற்றி பெற்றுவிட்டால், இரண்டு திராவிட கட்சிகளுக்குமே மூடு விழா நடத்தப்படும் என்றும், இந்த ஐந்து ஆண்டுகளில் விஜய் நல்லாட்சி கொடுத்தார் என்றால் அவருக்கு இருக்கும் வயதுக்கு சுமார் 20 ஆண்டுகள் குறைந்தது ஆட்சி செய்வார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
- மொத்தத்தில், விஜய்யின் அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாகவும், அவர் 2026 தேர்தலில் ஆட்சியை பிடித்தால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவரை அசைக்க முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இவை எல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
