திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய், தனது தமிழக வெற்றி கழகம்’ மூலம் அரசியலில் நுழைந்துள்ளார். அவரது இந்த அரசியல் பிரவேசம், அவர் ஏற்கெனவே திரைப்படங்களில் பெற்றிருக்கும் ‘மாஸ்’ என்னும் பெரும் மக்கள் கவர்ச்சி, அரசியலிலும் வெற்றியடைய உதவுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. குறிப்பாக, மோகன்லால் மற்றும் மம்முட்டி போன்ற கேரள நட்சத்திரங்களுடனும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற தமிழக ஜாம்பவான்களுடனும் விஜய் ஒப்பிட்டு பார்க்கப்படுவது குறித்து அரசியல் விமர்சகர்கள் மற்றும் தவெக தொண்டர்களின் கருத்துக்களை இங்கே விரிவாகக் காணலாம்.
மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் கேரளாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். அவர்களது திரைப்படங்களின் தாக்கம் மாநிலத்தை விட்டும் தாண்டி உள்ளது. இருப்பினும், அவர்கள் அரசியலில் நேரடியாகவோ, கட்சி ஆரம்பித்தோ இறங்கவில்லை. விஜய் தனது பிரபலத்தை அரசியலுக்கான ‘மாஸாக’ மாற்ற முயலும்போது, கேரளாவில் அவரது செல்வாக்கு குறித்தும் கேள்விகள் எழுகின்றன.
விஜய்க்கு கேரளாவில் மிகப் பெரிய ரசிகர் வட்டம் உள்ளது உண்மைதான். அவரது படங்கள் கேரளாவில் பெரிய அளவில் வசூலை ஈட்டுகின்றன. ஆயினும், அரசியல் விமர்சகர்கள் இதுகுறித்து மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர்:
“திரைப்படங்களில் விஜய்க்கு இருக்கும் மவுசு வேறு. அது அவரது சண்டைக் காட்சிகள், பாடல்கள் போன்றவற்றுக்கானது. ஆனால், அரசியல் என்பது கொள்கை, பிராந்திய உணர்வு, தலைவர்களின் மீதான நம்பிக்கை சார்ந்தது. கேரளாவில் உள்ள மக்கள் தங்கள் மாநில நடிகர்களான மோகன்லால் அல்லது மம்முட்டியை கூட முழு அரசியல் தலைவர்களாக ஏற்கவில்லை,” என்று ஒரு விமர்சகர் குறிப்பிடுகிறார்.
கேரள அரசியலில் மாநில மற்றும் தேசியக் கட்சிகளின் ஆதிக்கமே அதிகம். ஒரு தமிழ் நடிகரின் அரசியல் கட்சிக்கு அங்கே ஓட்டு போடுவது என்பது மாநில அடையாளத்துடன் ஒத்து போகாது. எனவே, கேரளாவில் விஜய்க்கு ஓட்டு கிடைப்பது என்பது அவரது திரைப்பட வெற்றியை போல எளிதானதல்ல.
மோகன்லால், மம்முட்டி இருவரும் தேசிய அளவில் விருதுகள் பெற்ற, செல்வாக்குள்ள நடிகர்களாக இருந்தாலும், அவர்கள் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை. அந்த மாநிலமே தனது உச்ச நட்சத்திரங்களை அரசியலில் இருந்து விலக்கி வைத்திருக்கும்போது, விஜய்யை ஏற்பது மிகக் கடினம்.
தமிழகத்தில் விஜய்யை ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருடன் ஒப்பிட்டு பார்க்கவேண்டியது அவசியம். இவர்கள் இருவரும் விஜய்க்கு முன்னதாகவே அரசியல் பிரவேசம் செய்தவர்கள்.
பல ஆண்டுகளாக அரசியலுக்கு வர போவதாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்த், கடைசியில் கட்சி தொடங்காமலேயே விலகிக் கொண்டார். அவரது ரசிகர் மன்றங்களின் வலுவான கட்டமைப்பை கூட அவர் அரசியல் மாஸாக மாற்ற தயங்கினார் அல்லது முடியவில்லை.
கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து சில தேர்தல்களைச் சந்தித்துள்ளார். அவருக்கு குறிப்பிடத்தக்க அறிவுசார் ஆதரவும், சிறிய அளவிலான வாக்குகளும் கிடைத்துள்ளனவே தவிர, தமிழகத்தின் பிரதான அரசியல் சக்திகளுள் ஒருவராக அவரால் இதுவரை எழுச்சி பெற முடியவில்லை.
இந்தச் சூழலில், விஜய்க்கு மட்டும் எப்படி அரசியல் ‘மாஸ்’ கிடைக்கும் என்ற கேள்வி எழுகிறது.
திரைப்படங்களில் ஒரு நடிகர் பெறும் வெற்றி என்பது ஒருவரது நடிப்பின் மீதும், அந்த படத்தின் வணிக வெற்றி மீதும் மட்டுமே சார்ந்தது. ஆனால், அரசியல் ‘மாஸ்’ என்பது ஒரு தலைவரின் ஆளுமை, கொள்கை, சமூகத்திற்கான பங்களிப்பு, வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறன் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அவர் காட்டும் அக்கறை ஆகியவற்றின் கூட்டு வடிவமாகும்.
“ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் திரையுலக மாஸ், அரசியல் மாஸாக மாற தவறிவிட்டது. அதே சவாலை விஜய் இப்போதும் எதிர்கொள்கிறார். திரையில் அவர் வெற்றி பெறும் ஃபார்முலா, நிஜ அரசியலில் செயல்படாது.”
திரைப்படங்களில் விஜய் பேசிய வசனங்கள், சமூகப் பிரச்சினைகள் குறித்த அவரது கருத்துகள் ஆகியவை ஒரு ஆரம்ப ஆதரவை தரலாம். ஆனால், நீண்ட கால அரசியல் பயணத்துக்கு விஜய்க்கு திரையுலக மாஸை விட வலுவான அரசியல் தத்துவமும் களப்பணியாளர்களும் தேவை.
விமர்சகர்களின் இந்த கருத்துக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் ஆக்ரோஷமான பதிலடி கொடுக்கின்றனர்.
ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் முயற்சி தோல்வியடைந்ததற்கு, அவர்கள் தாமதமாக வந்ததும், தெளிவான கொள்கைகள் இல்லாததுமே காரணம். இருவருக்குமே இளைஞர்கள் ஆதரவு கிடையாது. 40 வயதுக்கு மேல் உள்ளவர்களின் ஆதரவு மட்டுமே உண்டு. ஆனால் விஜய் இந்த தலைமுறையின் பிரதிநிதி. அவரது ‘மாஸ்’ என்பது சண்டைக்காட்சிகள் மட்டுமல்ல, அவர் தனது படங்களில் பேசிய சமூக நீதி மற்றும் அரசியல் வசனங்கள் தான். அதுவே அரசியல் கொள்கையாக மாறும்.”
“விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் கடந்த 25 ஆண்டுகளாக களத்தில் பணியாற்றி வந்துள்ளார். அரசியல் கட்சிகளை போல நாடகமாடாமல், மக்கள் நல திட்டங்களை அமைதியாக செய்து வந்துள்ளார். இந்த அடிமட்டப் பணிதான் அவரது உண்மையான அரசியல் ‘மாஸ்’.”
தமிழக மக்கள் ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாற்றை தேடுகின்றனர். விஜய் ஒரு இளம், பிம்பம் இல்லாத புதிய முகம். அவரது நேர்மை மீதான நம்பிக்கைதான் அவரது அரசியல் மாஸ். இது திரையுலக மாஸை விட வலிமையானது,” என்று தவெக-வின் முக்கிய நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நடிகர் விஜய்யின் திரையுலக ‘மாஸ்’ சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது. ஆனால், அதுவே நேரடியாக அரசியல் ‘மாஸாக’ மாறுமா என்பதை வருங்கால தேர்தல்கள்தான் தீர்மானிக்கும். மோகன்லால், மம்முட்டி போன்ற உச்ச நட்சத்திரங்கள் அரசியலில் இருந்து விலகி இருக்கும்போது, விஜய்யின் இந்த துணிச்சலான பிரவேசம் தமிழகத்தை தாண்டி அண்டை மாநிலங்களிலும் வெற்றி கிடைக்குமா? என்பது இந்திய அரசியலில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய மாற்றமாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
