தமிழக அரசியல் களம் தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி ஒரு மகா யுத்தத்திற்கு தயாராகி வருகிறது. ஒருபுறம் ஆளுங்கட்சியான திமுக, தனது கூட்டணியை தக்கவைத்துக் கொள்ளவும், உதிரி கட்சிகளை வளைத்து போடவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. திமுகவின் தற்போதைய அமைச்சரவையில் இருக்கும் செந்தில் பாலாஜி, சேகர் பாபு, முத்துசாமி, கண்ணப்பன், கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன், என பெரும்பாலான செல்வாக்குமிக்க அமைச்சர்கள் அனைவரும் ஒருகாலத்தில் அதிமுகவில் இருந்தவர்களே.
இப்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போன்றவர்களும் திமுகவை நோக்கி நகர்வது, திமுக தனது தனித்துவத்தை இழந்து ‘அதிமுக 2.0’ ஆக மாறி வருகிறதோ என்ற சந்தேகத்தை அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. இனிப்பு உள்ள இடத்தை தேடி எறும்புகள் மொய்ப்பது போல, அதிகாரம் உள்ள இடத்திற்குப் பலரும் தஞ்சம் புகுவது அரசியலில் வாடிக்கையாகிவிட்டது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, இந்த முறை திமுகவின் பிடியில் சிக்காமல் தனது உரிமைகளை நிலைநாட்ட போராடி வருகிறது. கடந்த 58 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத நிலையிலும், அகில இந்திய தலைமையின் ஆசியுடன் குறைந்தபட்சம் 40 இடங்கள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. “நாங்கள் தொண்டு நிறுவனம் அல்ல, அரசியல் கட்சி” என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடியாக பேசியிருப்பது திமுகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை திமுக இந்த கோரிக்கைகளுக்கு இணங்காவிட்டால், காங்கிரஸிற்கு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற மாற்று வாசல் திறந்தே இருப்பதாக கருதப்படுகிறது.
நடிகர் விஜய்யைப் பொறுத்தவரை, அவர் நிதானத்துடன் அரசியலை கையாண்டு வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் விவாகரத்து சர்ச்சை, வரி பிரச்சனைகள், சிபிஐ வழக்குகள் என பல சோதனைகள் அவரை சூழ்ந்திருந்தாலும், அவர் எதற்கும் பதற்றமடையாமல் தனது பாதையில் உறுதியாக இருக்கிறார். அவரை எதிர்க்க திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து போராட வேண்டிய நிலையில், விஜய் ‘தனி ஒருவனாக’ நின்று களம் காண்பது அவர் ஒரு மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதையே காட்டுகிறது. தவெக கூட்டங்களுக்கு மக்கள் தானாக முன்வந்து காட்டும் எழுச்சியும், அந்த இளைய தலைமுறையின் துள்ளலும் மற்றக் கட்சிகளின் ‘ஏற்பாடு செய்யப்பட்ட’ கூட்டங்களுக்கு ஒரு சவாலாக உள்ளது.
விஜய்யின் அரசியல் முதிர்ச்சி மற்றும் பண்பான பேச்சு பலரையும் வியக்க வைத்துள்ளது. மற்ற தலைவர்களை போல எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசாமல், யோசித்து நிதானமாக பேசுவது அவருக்கு ஒரு தனித்துவமான பிம்பத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர்களின் சில தனிப்பட்ட தாக்குதல்களை அவர் எதிர்கொண்ட விதம், அவருக்கு பெண் வாக்காளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மத்தியில் பெரும் மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 தேர்தலில் அவர் ஒரு ‘டிசிசிவ் போர்ஸ்’ ஆக இருப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அரசியல் எதிரிகள் வீசும் பிரம்மாஸ்திரங்களை அவர் தனது நிதானத்தால் முறியடித்து வருகிறார்.
திமுக அரசு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமை தொகை போன்ற திட்டங்கள் மூலம் பெண் வாக்காளர்களை கவர முயன்றாலும், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் ஒருவித ‘அண்ணன்-தம்பி’ ‘அக்கா தம்பி’ போன்ற உணர்வுப்பூர்வமான பிணைப்பை உடைப்பது அவ்வளவு எளிதல்ல. இதனால்தான், விஜய்யின் நற்பெயரை கெடுப்பதற்காகவே அவரது குடும்ப விவகாரங்கள் திட்டமிட்டு வெளியே விடப்படுவதாக புகார்கள் எழுகின்றன.
இறுதியாக, 2026 தேர்தல் என்பது வெறும் வாக்குகளுக்கான போட்டியல்ல, அது தமிழகத்தின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றப்போகும் ஒரு பெரும் போராட்டம். 117 இடங்களை பிடித்து கோட்டையில் கொடி ஏற்றுவது யார் என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும். கூட்டணி பேச்சுவார்த்தைகள், கட்சி தாவல்கள், தனிநபர் தாக்குதல்கள் என அரசியல் வானவேடிக்கைகள் இனி வரும் நாட்களில் இன்னும் அதிகமாகும். ஒருபுறம் அதிகார பலம், மறுபுறம் மக்கள் எழுச்சி, இந்த இரண்டுக்கும் இடையிலான இந்த ஆட்டத்தில் விஜய் தனது ‘நிதானம்’ என்ற ஆயுதத்தால் தமிழக அரசியலில் ஒரு புதிய வரலாற்றைப் படைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
