நடிகர் விஜய்யின் அரசியல் சுற்றுப்பயணம், தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நகரில் நடந்த முதல் பிரச்சார கூட்டத்தில், எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் திரண்டது, அனைத்து அரசியல் கட்சிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்வு, விஜய் ஒரு வெறும் சினிமா நடிகர் மட்டுமல்ல, ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறார் என்பதை உணர்த்துகிறது.
விஜய்யின் கூட்டத்தை குறித்து, “அரசியல் படுத்தப்படாத கூட்டம், இது வாக்குகளாக மாறாது” என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இந்த வாதம் உண்மைக்கு புறம்பானது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு தனி மனிதனை பார்ப்பதற்காக பல மணிநேரம் வெயிலில் காத்திருக்கும் ஒருவர், தேர்தல் நாளில் அவருக்கு வாக்களிக்காமல் இருக்க மாட்டார். இது ஒரு தர்க்கரீதியான செயல்.
மேலும், திராவிட கட்சிகளின் தொண்டர்கள் கூட, கொள்கைகளுக்காக அல்லாமல், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் போன்ற தனிப்பட்ட தலைவர்களின் செல்வாக்கால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தவர்கள்தான். அதேபோல், சீமானின் பின்னால் அணிவகுப்பவர்களும் அவரது பேச்சின் தாக்கத்தால் வந்தவர்களே. எனவே, விஜய் ரசிகர்களை மட்டும் “ஆட்டு மந்தைகள்” என்று விமர்சிப்பது சரியாகாது.
திரண்ட கூட்டத்தின் அடிப்படையில், சிலர் விஜய்யை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுகின்றனர். எம்.ஜி.ஆர். பொதுக்கூட்டங்களுக்கு தாமதமாக வந்தாலும், அவருக்காக மக்கள் விடிய விடிய காத்திருப்பார்கள். அந்த உற்சாகம், திருச்சி கூட்டத்திலும் காணப்பட்டது.
எனினும், எம்.ஜி.ஆர். எவ்வளவு தாமதமாக வந்தாலும், மக்களை சந்தித்து உரையாற்றுவார். அதேபோல் விஜய்யும் தன்னுடைய அடுத்தடுத்த பயணத்தில் அவரை பார்க்கக் காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தாமல், ஒருசில வார்த்தையாவது பேசி, மக்களின் காத்திருப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள், போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைந்தன. திறந்த வாகனத்தில் ஊர்வலமாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டது, மக்கள் கூட்டத்தை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் குவித்து, மேலும் நெரிசலை அதிகரித்தது.
இது விஜய்யின் மீது திமுக அரசு கொண்டுள்ள அரசியல் அச்சத்தின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி போன்றோர் தங்கள் பயணங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் சந்திப்பதில்லை. ஆனால், விஜய்க்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது, அவரது உண்மையான செல்வாக்கு ஊடகங்களின் வழியாக மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே என்று கூறப்படுகிறது.
விஜய்யின் அரசியல் எழுச்சி, மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியை பிரிப்பதுடன், தமிழக அரசியலை புதிய பாதையில் கொண்டு செல்லும். அவருடைய அடுத்தடுத்த சுற்றுப்யணங்களும் இதேபோல வெற்றி பெறுமானால், அது தேர்தலுக்கு முன்னர் ஒரு பெரிய அரசியல் அலையை உருவாக்கும். அரசியல் படுத்தப்படாத இளைஞர் கூட்டம், வெகு விரைவில் அரசியல் மாற்றத்திற்கான ஒரு சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
