தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடுக்கப்போகும் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அகில இந்திய அளவில் செல்வாக்கை இழந்து வரும் காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கூட்டணி அமைக்க திட்டமிடுவதாக வெளியாகும் செய்திகள், அரசியல் விமர்சகர்களிடையே பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளன. “பாஜகவை விட குறைவான வாக்கு வங்கியை தமிழகத்தில் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியால் விஜய்க்கு என்ன லாபம்?” என்ற கேள்வி உரக்க ஒலிக்க தொடங்கியுள்ளது.
பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர் விஜய்யை நேரில் சந்தித்து அவருக்கு வழங்கியதாக கூறப்படும் ஆலோசனையில், ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியாவை பற்றி மட்டமாக பேசுவது தமிழக மக்கள் மட்டுமின்றி இந்திய அளவில் தேசபக்தி உடைய பொதுமக்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார். தேசப்பற்று மிக்க இளைஞர்களை ஈர்க்க நினைக்கும் விஜய்க்கு, இத்தகைய பிம்பம் கொண்ட கட்சியுடன் கைகோர்ப்பது பின்னடைவாக அமையலாம் என்பதே அந்த விமர்சகரின் வாதம். மேலும், “திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பேசும் விஜய், மீண்டும் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்தால் அது அவரது தனித்துவத்தை சிதைத்துவிடும்” என்றும் அந்த ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.
வாக்கு வங்கி அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு என்று தனிப்பட்ட வாக்கு சதவீதம் மிகக்குறைவு. திமுகவின் தோளில் ஏறிக்கொண்டே அந்த கட்சி இத்தனை இடங்களை வென்று வருவதாக பரவலான விமர்சனம் உண்டு. தற்போதைய சூழலில் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் காங்கிரஸை விட அதிகரித்து வரும் நிலையில், பலவீனமான காங்கிரஸை தூக்கி சுமப்பது விஜய்யின் ‘வெற்றி பயணத்தை’ முடக்கிவிடும் என்றும், அதற்கு மிகச்சிறந்த உதாரணம் பீகார் தேர்தல் முடிவுகள் என்றும் அந்த பிரபல விமர்சகர் புள்ளிவிவரங்களுடன் விஜய்யிடம் விவரித்ததாக தெரிகிறது.
சிறுபான்மையினரின் வாக்குகளை பொறுத்தவரை, திமுக அரசு மீதுள்ள சில அதிருப்திகள் காரணமாக, சுமார் 50% சிறுபான்மையினர் வாக்குகள் இயற்கையாகவே தவெக பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது, அந்த வாக்குகளை பெறுவதற்காக மட்டும் காங்கிரஸ் என்ற சுமையை விஜய் ஏன் சுமக்க வேண்டும்? காங்கிரஸ் இல்லாமல் தனித்து நின்றாலே சிறுபான்மையினர் ஆதரவு விஜய்க்கு உறுதி என அந்த விமர்சகர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்த ஆலோசனைகள் விஜய்யை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தியுள்ளன. தவெக கட்சியின் உள்வட்டார தகவல்களின்படி, விஜய் தற்போது தனது ஆலோசகர் குழுவிடம் காங்கிரஸை தவிர்த்துவிட்டு பிற கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசித்து வருகிறாராம். குறிப்பாக, சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற பெரிய தேசியக் கட்சிகள் தேவையில்லை, மாறாக விஜய்யின் நேரடி செயல்பாடுகளே போதும் என்ற கருத்தும் வலுவாக முன்வைக்கப்படுகிறது.
மொத்தத்தில் 2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், விஜய் எடுக்கப்போகும் முடிவு தமிழக அரசியலின் தலையெழுத்தையே மாற்றக்கூடும். காங்கிரஸ் என்ற தேய்ந்து வரும் சக்தியை பிடிப்பதா அல்லது தனது சுயபலத்தை நம்பி தனித்து போராடுவதா? என்ற தர்மசங்கடத்தில் விஜய் இருப்பதாக தெரிகிறது. எது எப்படியோ, பிரபல விமர்சகரின் அந்த ஆதாரங்களுடன் கூடிய ஆலோசனை விஜய்யின் அரசியல் வியூகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டும் உறுதி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
