நான் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் இல்லை.. விஜய்யை சீண்டுகிறாரா உதயநிதி.. ஆனால் விஜய்யின் டார்கெட் ஸ்டாலின் மட்டுமே.. உதயநிதியை அவர் கண்டுகொள்ளவே மாட்டார்.. மோடியுடன் மோதும் ஸ்டாலின், விஜய்யுடனும் மோத வேண்டிய நிலை வருமா?

‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சித் தலைவர் விஜய், வாரந்தோறும் சனிக்கிழமை அன்று திமுக அரசை விமர்சித்து பேசி வருவது தமிழக அரசியலில் ஒரு புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது. இதுவரை திமுக அமைச்சர்கள் மட்டுமே விஜய்யை…

vijay udhayanidhi stalin

‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சித் தலைவர் விஜய், வாரந்தோறும் சனிக்கிழமை அன்று திமுக அரசை விமர்சித்து பேசி வருவது தமிழக அரசியலில் ஒரு புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது. இதுவரை திமுக அமைச்சர்கள் மட்டுமே விஜய்யை விமர்சித்து வந்த நிலையில், தற்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக விஜய்யை குறிப்பிட்டு, “நான் எல்லாம் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல” என்று பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமர்சனத்திற்கு பின்னால் ஒரு அரசியல் வியூகம் உள்ளது என கூறப்படுகிறது.

இவ்வளவு காலமாக விஜய்யின் விமர்சனங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரடியாக பதிலளிக்காமல் இருந்தார். ஒருமுறை, “சினிமா செய்திகளையெல்லாம் நான் பார்ப்பதில்லை” என்று கூறி, விஜய்யை ஒரு அரசியல் தலைவராக அங்கீகரிக்க அவர் மறுத்தார். ஆனால், இப்போது விஜய் தனது அடுத்த கட்ட மக்கள் சந்திப்பு பயணத்திற்கு தயாராகி வரும் நிலையில், உதயநிதி நேரடியாக பேசியதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

உதயநிதியின் இந்த விமர்சனம், விஜய்யை அதற்கு பதிலளிக்கத் தூண்டும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது. விஜய் பதிலளித்தால், அது “விஜய் Vs உதயநிதி” என்ற ஒரு புதிய அரசியல் மோதலை உருவாக்கும்.

ஆனால் இதுவரை, விஜய் தனது அரசியல் மோதலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மட்டுமே நிகழ்த்தி வருகிறார். அவர் தனது பேச்சுகளில் எங்கும் உதயநிதியின் பெயரை குறிப்பிடவில்லை. ஏனெனில், இது “ஸ்டாலின் Vs விஜய்” என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி, விஜய்க்கு ஒரு அரசியல் உயர்வைக் கொடுக்கும் என்று அவர் நம்புகிறார். இன்று கரூரில் ஒருவேளை அவர் உதயநிதியை விமர்சனம் செய்தால், அவரை ஒரு படி கீழே இறக்கும். இந்த அரசியல் வியூகத்தை புரிந்து கொண்டு விஜய் சுதாரிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தவெக தொண்டர்களின் கருத்துப்படி விஜய், உதயநிதிக்கு நேரடியாக பதிலளிக்க மாட்டார் என்றே கூறி வருகின்றனர். விஜய் தனது அரசியல் பிம்பத்தை மிகவும் கவனமாக வடிவமைத்து வருகிறார். அவர் தன்னை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரடி போட்டியாளராக மட்டுமே நிலைநிறுத்த விரும்புகிறார். ஒருவேளை, உதயநிதிக்கு அவர் பதிலளித்தால், அது ஒரு தொடர் விவாதத்திற்கு வழி வகுத்து, விஜய்யின் அரசியல் இமேஜுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

விஜய் ஒரு கட்சியின் தலைவர் மற்றும் முதல்வர் வேட்பாளர். ஆனால், உதயநிதி ஒரு கட்சியின் இளைஞரணி செயலாளரும் மட்டுமே. எனவே உதயநிதியை விஜய் கண்டுகொள்ள வாய்ப்பு இல்லை. ஒருவேளை உதயநிதி வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டால் அப்போது உதயநிதிக்கு அவர் பதிலளிக்க வாய்ப்பு உள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற தலைவர்கள் இருந்த காலகட்டத்தில், ஒரு எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம் செய்தால், அதற்கு தங்கள் கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்களை பதிலளிக்க சொல்வார்கள். இதன்மூலம், தலைவரின் அந்தஸ்து குறையாமல் பார்த்து கொள்வார்கள். இதே உத்தியைத்தான் திமுகவும் இப்போது கையாள்வதாக கூறப்படுகிறது.

இதேபோல், உதயநிதி ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு எடப்பாடி பழனிசாமி நேரடி பதில் அளிப்பதில்லை. அதேபோல, விஜய்யும் தன்னை ஒரு பெரிய தலைவருக்கு இணையாக மட்டுமே வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஒவ்வொரு வாரமும் புதிய மாவட்டங்களுக்கு சென்று, உள்ளூர் பிரச்சனைகளை தொடுவதால், அது மக்கள் மத்தியில் விவாதத்தை தூண்டி, அவரது அரசியல் பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்கிறது. உதாரணமாக, கரூர் மற்றும் நாமக்கல்லில் அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாக விமர்சித்து, நாமக்கல்லில் கிட்னி திருட்டு விவகாரத்தை பேசினால் அவை அடுத்த வாரம் முழுவதும் டிரெண்ட் ஆகிவிடும்.