அதிமுக தலைமையிடம் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் விஜய் கட்சியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுவது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் விஜய் கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கருத்து வேறுபாடுடன் செங்கோட்டையன் இருப்பதாகவும், அதிமுக கூட்டங்களில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை பயன்படுத்தி திமுக உள்ளிட்ட கட்சிகள் அவரை இழுக்க முயற்சி செய்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆனால், அதிமுகவை தவிர வேறு எந்த கட்சியிலும் சேர திட்டம் எதுவும் இல்லை என்று செங்கோட்டையன் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விஜய் கட்சியில் சேர செங்கோட்டையன் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது முழுக்க முழுக்க வதந்தி தான்; இந்த வதந்தியில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை என்று செங்கோட்டையனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
அதுமட்டுமின்றி, செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்தால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஐந்து பேரும் கட்சியில் இருந்து விலகி விஜய் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவே இன்னும் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, அதிமுகவில் இருந்து சசிகலா, ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் பிரிந்து விட்ட நிலையில், செங்கோட்டையன் உள்பட இன்னும் சில பிரபலங்கள் கட்சியை விட்டு வெளியேறினால், அதிமுக காணாமல் போய்விடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுகவுடன் கூட்டு சேர்வதை விட, அதிமுகவை சல்லிசலியாய் நொறுக்கி, அந்த கட்சியில் உள்ள பிரமுகர்களை தனது கட்சிக்கு வரவழைத்தாலே தனது கட்சி பலமாகிவிடும் என்று விஜய் எண்ணுகிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தேர்தல் வரை ஏராளமான அரசியல் வதந்திகள் வந்து கொண்டே இருக்கலாம். ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்தால் மட்டுமே, அது வதந்தியா அல்லது உண்மையா என்பது தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.