தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கிய களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எடுத்துள்ள அதிரடி முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விஜய் விடுத்துள்ளதாக கூறப்படும் தூது, திராவிட அரசியலின் அடித்தளத்தையே அசைத்து பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. “எடப்பாடியாரை என்னுடன் கூட்டணிக்கு வர சொல்லுங்கள், அவருக்கு துணை முதல்வர் பதவியும், அதிமுகவிற்கு 10 முக்கிய அமைச்சர் பதவிகளும் வழங்க தயார்; ஆனால் கூட்டணிக்கு நான் தான் தலைமை தாங்குவேன், நானே முதல்வர் வேட்பாளர்” என்ற விஜய்யின் கறாரான பிடிவாதம், ஒரு புதிய அதிகார போட்டியை தொடங்கி வைத்துள்ளது.
விஜய்யின் இந்த திட்டவட்டமான முடிவு, தமிழகத்தில் பல ஆண்டுகளாக நிலவி வரும் திமுக – அதிமுக என்ற இருமுனை போட்டியைத் தகர்த்து, தன்னை ஒரு ‘மாற்றுச் சக்தியாக’ நிலைநிறுத்தும் முயற்சியாகும். ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி தரும் சினிமா வாழ்க்கையை துறந்துவிட்டு வந்திருப்பதால், தான் ஒருபோதும் இன்னொருவர் கையில் ஆட்சி கட்டிலை கொடுக்க தயாராக இல்லை என்பதை அவர் தனது செயல்கள் மூலம் நிரூபித்து வருகிறார். அதிமுக போன்ற ஒரு பாரம்பரியமிக்க கட்சியையே தனக்கு கீழ் கொண்டுவர நினைக்கும் விஜய்யின் துணிச்சல், அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், மூத்த அரசியல்வாதிகளிடையே ஒருவித வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவை ஒருபோதும் தனது கூட்டணியில் சேர்க்க மாட்டேன் என்ற விஜய்யின் பிடிவாதம், தமிழகத்தின் சமூக நீதி மற்றும் திராவிட அரசியல் சூழலை அவர் நன்கு புரிந்து வைத்துள்ளதை காட்டுகிறது. சிறுபான்மையின மக்களின் வாக்குகள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் ஆதரவை பெற வேண்டுமானால், பாஜகவின் நிழல் தன் மீது படக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு அவர் வைத்துள்ள நிபந்தனை, அதிமுகவை தனது செல்வாக்கிற்குள் கொண்டு வந்து, அதன் மூலம் திமுகவை வீழ்த்தும் ஒரு கணக்கிடப்பட்ட வியூகமாகும். இதன் மூலம் ‘திராவிட மாடல்’ அரசியலுக்கு எதிராக ஒரு ‘தமிழ் தேசிய மற்றும் மக்கள் நல’ அரசியலை அவர் முன்வைக்க முயல்கிறார்.
இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு மிகவும் இக்கட்டானதாக மாறியுள்ளது. 50 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட அதிமுக, ஒரு புதிய அரசியல் கட்சியிடம் பணிந்து போகுமா அல்லது தனது ‘பெரியண்ணன்’ அந்தஸ்தை தக்கவைக்க போராடுமா என்பதுதான் தற்போதைய கேள்வி. துணை முதல்வர் பதவி மற்றும் 10 அமைச்சரவை இடங்களுக்கும், முதல்வர் பதவியை விட்டுக்கொடுப்பதற்கும் ஒருபோதும் அவர் சம்மதிக்க மாட்டார். அதற்கு திமுகவே ஆட்சியை பிடித்தால் பிடித்து கொள்ளட்டும் என்ற மனநிலையில் தான் அவர் இருப்பார்.
தமிழக அரசியலில் இனி வரும் நாட்களில் ‘மூன்றாவது அணி’ என்பது வெறும் பேச்சளவில் இல்லாமல், ஒரு வலுவான சக்தியாக உருவெடுக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் அதிமுக மற்றும் தவெக இடையே ஒரு இணக்கமான சூழல் ஏற்படாவிட்டால், அது வாக்குகளை பிரித்து மீண்டும் திமுகவிற்கே சாதகமாக முடியவும் வாய்ப்புள்ளது.
மொத்தத்தில் 2026 தேர்தல் என்பது கொள்கைகளை விட ‘அதிகாரப் பகிர்வு’ மற்றும் ‘தலைமை’ குறித்த போராகவே இருக்கும். விஜய் தனது முடிவில் பிடிவாதமாக இருக்கும் பட்சத்தில், தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படலாம் அல்லது புதிய கூட்டணிகள் உருவாகலாம். மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை தாண்டி, கட்சிகளுக்கிடையிலான இந்த சதுரங்க ஆட்டம் தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. விஜய்யின் இந்த துணிச்சலான நகர்வு வெற்றியை தருமா அல்லது அவர் மீண்டும் ஒருமுறை தனது வியூகங்களை மாற்றியமைக்க வேண்டியிருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
