தமிழக அரசியலில், விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ வருகை, இருபெரும் திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சியான பா.ஜ.க. ஆகியவற்றுக்கு ஒரு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய் எடுத்து வரும் வேகமான அரசியல் நகர்வுகள், தி.மு.க., பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கவனத்தை அவர் பக்கம் திருப்பியுள்ளது. ‘சேதாரம் இல்லாமல்’ விஜய்யை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த தி.மு.க. காய் நகர்த்துகிறதா? பா.ஜ.க. அவரை இழுக்க பார்க்கிறதா? ராகுல் காந்தியின் அழைப்புக்கு என்ன பொருள்? விஜய்யின் இறுதி முடிவு என்னவாக இருக்கும்? என்ற கேள்விகள் தமிழக அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளன.
அதிகாரத்தில் இருக்கும் தி.மு.க.விற்கு, விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒரு கணிசமான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஒருபுறம், பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வின் கூட்டணி சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் நிலையில், விஜய்யின் வருகை வாக்குகளைப்பிரிக்கும் சக்தியாக செயல்பட வாய்ப்புள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு எதிரான வாக்குகளை விஜய்யின் த.வெ.க. கணிசமாக பிரித்தால், அது மறைமுகமாக தி.மு.க.வின் வெற்றி வாய்ப்புகளுக்கு உதவும் என்று ஒருசாரார் நம்புகின்றனர். ஆனால், அவர் நேரடியாக தி.மு.க.வுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், தி.மு.க.வின் பாரம்பரிய வாக்கு வங்கியில் இருந்தும் அவர் வாக்குகளை பெறக்கூடும் என்ற கவலையும் நிலவுகிறது.
ஊழல், வாரிசு அரசியல், சட்டம்-ஒழுங்கு போன்ற விவகாரங்களில் விஜய், தி.மு.க.வை மிக கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். இதனால், அவரை நேரடியாக விமர்சிப்பதை தி.மு.க. தவிர்த்து வருகிறது. அவரை அதிக பிரஷர் செய்து, பா.ஜ.க. பக்கம் தள்ளிவிடக் கூடாது என்பதில் தி.மு.க. கவனமாக உள்ளது.
சமீபத்தில் நிகழ்ந்த கருர் பேரணி போன்ற துயர சம்பவங்கள், விஜய்க்கு எதிராக சில சட்டரீதியான சிக்கல்களை உருவாக்கியுள்ளன. இந்த விவகாரங்களில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அவருக்கு அரசியல் ரீதியாக எந்தவொரு ‘வீர பட்டத்தை’யும் அளித்துவிடாமல், அதே சமயம் மக்கள் மத்தியில் ‘விஜய் மீதான பிம்பம்’ சேதாரமாகாமல் பார்த்துக்கொள்ளும் வியூகத்தை தி.மு.க. கையாளுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதாவது, அரசியலில் இருந்து ‘சேதாரம் இல்லாமல்’ விஜய்யை சோர்வடைய செய்யும் விதத்தில் காய்களை நகர்த்துவதாக கூறப்படுகிறது.
தேசிய அளவில் ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க., தமிழகத்தில் வலுவான தளத்தை உருவாக்க முயற்சிக்கும் நிலையில், விஜய்யின் ‘த.வெ.க.’வை ஒரு முக்கிய சக்தியாக பார்க்கிறது.
பா.ஜ.க. தலைவர்கள் வெளிப்படையாகவே, “ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் விஜய் எங்களுடன் இணைய வேண்டும். தி.மு.க.வை மட்டுமே த.வெ.க. எதிரியாக கருத வேண்டும்” என்று அழைப்பு விடுக்கின்றனர். இது, விஜய்யை பா.ஜ.க. கூட்டணிக்குள் இழுத்து, தி.மு.க.விற்கு எதிரான ஒரு வலுவான அணி சேர்க்கும் முயற்சி ஆகும்.
ஆனால், விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். அவர் பா.ஜ.க.வை ‘கொள்கை எதிரி’ என்றும், தி.மு.க.வை ‘அரசியல் எதிரி’ என்றும் வகைப்படுத்தியுள்ளார். மத்திய அரசின் நீட், புதிய கல்வி கொள்கை போன்ற விவகாரங்களில் அவரது எதிர்ப்பு பா.ஜ.க.வுடன் கூட்டணி சேருவதற்கு தடையாக உள்ளது.
இருப்பினும், தி.மு.க.வின் சட்டரீதியான அழுத்தங்கள் அதிகரித்து, விஜய் அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்படும் சூழல் ஏற்பட்டால், அவர் அரசியல் ரீதியான பாதுகாப்புக்காக பா.ஜ.க. பக்கம் சாய்வதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவாக இருந்தாலும், முற்றிலும் நிராகரிக்க முடியாது. இந்த கவலைதான் தி.மு.க.வை நிதானமான அணுகுமுறையுடன் செயல்பட வைக்கிறது.
இந்த நிலையில் தான் சமீபத்தில் கருரில் நடந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, விஜய்யுடன் தொலைபேசியில் பேசியது ஒரு முக்கிய அரசியல் சைகையாக பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தியின் இந்த அழைப்பு, ஒரு தேசிய தலைவராக, துயரத்தில் ஆறுதல் கூறுவது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டாலும், அதன் அரசியல் தாக்கம் ஆழமானது. விஜய்யை எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இந்தியா’ கூட்டணிக்கு வெளியே தள்ளிவிடக் கூடாது; மாறாக, தேசிய அளவில் பா.ஜ.க.வை எதிர்க்கும் அணியில் அவர் இணைவதற்கான நம்பிக்கையையும், கதவுகளையும் திறந்து வைப்பதாக இந்தச் செயல்பாடு அமைந்துள்ளது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்தாலும், ராகுல் காந்தி இருதரப்பையும் அழைத்து பேசியது, மத்தியில் பா.ஜ.க.வை எதிர்க்கும் தேசிய கொள்கையின் அடிப்படையில் விஜய்யை இணைத்து செல்ல காங்கிரஸ் விரும்புவதை காட்டுகிறது. அதாவது, “பா.ஜ.க. பக்கம் போகாதீங்க… நாம ஒண்ணா சேருவோம்” என்ற மறைமுக செய்தியை ராகுல் காந்தி விஜய்க்கு வழங்கியுள்ளார்.
விஜய், தன்னுடைய முதல் மாநாடுகளில் தன்னை ஒரு ‘சிங்கமாக’ ஒப்பிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலை தி.மு.க.விற்கு எதிரான போராக அறிவித்தார். அவர் தனியாக களமிறங்கி ஆட்சியைப் பிடிக்கவே விரும்புகிறார். அவர் தனது கட்சிக்கு தலைமை தாங்கும் கூட்டணியில் மட்டுமே இணைவதாக தெளிவுபடுத்தியுள்ளார். இது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் கூட்டணி வாய்ப்புகளை தற்போது நிராகரிக்கிறது.
மொத்தத்த்ஹில் தி.மு.க.வின் மறைமுகமான அழுத்தங்கள், பா.ஜ.க.வின் வெளிப்படையான அழைப்புகள் மற்றும் தேசியத் தலைவர்களின் சமிக்ஞைகள் மத்தியில், விஜய் தனது கட்சியின் சித்தாந்தமான ‘மக்களுக்கான அரசியல்’ என்ற பாதையில் உறுதியாக நிற்பாரா, அல்லது தேர்தல் தேவைக்காக ஏதேனும் ஒரு தேசிய கூட்டணியுடன் கைகோர்ப்பாரா என்பதே 2026 தமிழகத் தேர்தலின் மிக முக்கியமான கேள்வியாக இருக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
