தமிழக வெற்றிக் கழகம் தொடர்ச்சியாக சந்திக்கும் அரசியல் சிக்கல்கள், குறிப்பாக அதன் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணங்களின்போது ஏற்படும் தடைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. நீதிமன்ற உத்தரவுகள், காவல்துறை கட்டுப்பாடுகள் மற்றும் ஆளும் தரப்பின் அரசியல் அழுத்தங்கள் என இந்த பிரச்னை பல பரிமாணங்களை கொண்டிருக்கிறது.
எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான விதிகளை பின்பற்றுவதுதான் நியாயம். ஆனால், தமிழக வெற்றி கழகத்திற்கு மட்டும் ஏன் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. முதலமைச்சர் அல்லது அமைச்சர்களின் வாகன அணிவகுப்புகளுக்கு தாராளமாக அனுமதி வழங்கப்படுகிறது, எந்த கேள்வியும் எழுப்பப்படுவதில்லை. ஆனால், விஜய்யின் நிகழ்வுகளுக்கு மட்டும் காவல்துறை பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது என்றும், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்றும் தவெக குற்றம் சாட்டுகிறது.
இதை இரண்டு விதமாக பார்க்க முடியும். முதல் கோணத்தில், ஒரு புதிய கட்சி எழும்போது, ஆளும் தரப்பு மற்றும் அதிகார மையங்கள் அதற்கு அழுத்தம் கொடுப்பது இயல்பு. இரண்டாவது கோணத்தில், விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்கால், கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது. அந்த கூட்டத்தை நிர்வகிப்பது காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
வேறு ஒரு கட்சி தலைவர் ஒரு முக்கிய இடத்தில் நின்றால் கூட அங்கே கூட்டம் சேரும். ஆனால், விஜய்யின் மக்கள் சந்திப்பில் கூடும் கூட்டத்தை கையாள்வது மிகக் கடினம். திருச்சி நிகழ்வில், விமான நிலையத்திலிருந்து காந்தி மார்க்கெட்டுக்கு 8 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 6 மணி நேரம் ஆனது. இது காவல்துறைக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.
தமிழக வெற்றி கழகத்தின் கூட்டங்களுக்கு போதுமான காவல்துறை பாதுகாப்பு மறுக்கப்படுகிறது என்று சில விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால், ஒவ்வொரு நிகழ்விற்கும் பெருமளவில் காவல்துறை குவிக்கப்படுவது ஒரு வகையில் தவெகவின் பலத்தை காட்டுகிறது. இவ்வளவு போலீஸை போட வேண்டியிருக்கு, வேறு வழியில்லை” என்ற நிலை, விஜய்யின் மக்கள் செல்வாக்கின் பிரதிபலிப்பு.
நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு விசாரணையில், அரசு தரப்பு தவெக தொண்டர்கள் மின்கம்பங்கள் மற்றும் மரங்களின் மீது ஏறும் வீடியோக்களை காட்டியுள்ளது. இது, தொண்டர்களின் கட்டுப்பாடு இன்மையையும், அதன் மூலம் ஏற்படும் ஆபத்துகளையும் வெளிப்படுத்துகிறது. இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அதன் பழியும், பொறுப்பும் தவெக மீதுதான் வரும். எனவே, விஜய்யும், அவரது கட்சியும் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
ரோட் ஷோவுக்கு அனுமதி மறுக்கப்படுவதுகூட ஒரு வகையில் விவேகமான முடிவுதான். ரோட் ஷோ என்பது வழிநெடுக கூட்டம் சேருவதற்கு வழிவகுக்கும். இது கூட்டத்தை மேலும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளும். பாதுகாப்பு குறைபாடுகள், விபத்துகள், மின்கம்பங்கள் மீது ஏறுதல் போன்ற பிரச்னைகள் மேலும் அதிகரிக்கும். இது விஜய்க்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, காவல்துறை சொல்வதுபோல், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் மக்களை சந்திப்பது இந்த பயணத்தை முழுமையடைய செய்ய உதவும். இந்த நிலையில் வரும் நாட்களில் விஜய் ஹெலிகாப்டரை பயன்படுத்தி நேராக மக்கள் சந்திப்பு நடக்கும் இடத்திற்கே வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் சாலைகளில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்றும் தவெக தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது,.
திருச்சி கூட்டத்தின் பிரம்மாண்டம் மற்ற கட்சிகளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “சும்மா 5% அல்லது 8% வாக்குகள் என்று நினைத்தோம், ஆனால் இது ஒரு பெரிய வாக்கு சதவீதத்தைப் பெறும் போலிருக்கிறது” என்ற எண்ணம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் மற்றும் பிற கட்சிகள் என அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பிரிந்து வந்திருக்கும் டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். போன்றோர்தான் விஜய்யுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளது. ஆனால், விஜய், ஏற்கெனவே ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளவர்களை கட்சியில் சேர்ப்பதில் தயக்கம் காட்டுகிறார் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது. இருப்பினும், தேர்தல் நேரத்தில் கட்சியாக வரும்போது, இதுபோன்ற முடிவுகள் மாற வாய்ப்புள்ளது.
விஜய்யின் கூட்டங்கள் அவரது அரசியல் செல்வாக்கின் பலத்தை காட்டுகின்றன. ஆனால், இந்த மக்கள் ஆதரவை வெற்றியாக மாற்ற, அவர் நீதிமன்றம், காவல்துறை மற்றும் அரசியல் அழுத்தங்களை முதிர்ச்சியுடன் கையாள வேண்டும்.
நாளை (செப்டம்பர் 20, 2025) நாகப்பட்டினத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. இது ஒரு மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அவர் அரசியல் பிரச்னைகளை தவிர, இந்த பகுதிக்குரிய மீனவர்களின் பிரச்னைகள், கடல் எல்லை சிக்கல்கள் போன்றவை குறித்து உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சியில் அவர் பேசியதுபோல, அவரது பேச்சுக்கள் மக்களை ஈர்க்குமா என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
