தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பொதுக்கூட்டம் என்றும், ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு ஆர்ப்பாட்டம் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான அட்டவணைகள் அமைக்கப்பட்டுவிட்டதாகவும், விஜய் நேரடியாக களத்தில் இறங்கி ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொள்ள இருப்பதாகவும் தமிழக வெற்றி கழகத்தின் வட்டாரங்கள் கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள விஜய், “வீட்டில் இருந்து அரசியல் செய்கிறார்” என்றும், “ட்விட்டர் மூலம் அரசியல் செய்கிறார்” என்றும், “களத்தில் இன்னும் இறங்கவே இல்லை” என்றும் குற்றச்சாட்டுகளை அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும் இதை விஜய்க்கு ஒரு பலவீனம் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தான், ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் ஆகியவற்றை முழுவதுமாக முடித்துவிட்ட விஜய், அடுத்த கட்டமாக முழுநேர அரசியலில் இறங்க போகிறார். மேலும், அவர் தனது நெருக்கமான நிர்வாகிகளை அழைத்து, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் ஆகிவற்றுக்கு திட்டமிட்டுள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று அவர் கூறியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
அதேபோல், பரந்தூர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சனை, ஜாக்டோ ஜியோ பிரச்சனை, சாம்சங் பிரச்சனை, டாஸ்மாக் பிரச்சனை, அஜித் குமார் மரண பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் கையில் எடுக்க போவதாகவும், அந்தந்த பிரச்சனை உள்ள பகுதிகளில் ஆர்ப்பாட்டம் செய்ய போவதாகவும், அதில் விஜய்யே அந்த ஆர்ப்பாட்டத்திற்குத்தலைமை ஏற்க போவதாகவும் கூறப்படுகிறது. அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினால் விஜய் கைதாக வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கு இப்போதே சட்ட வல்லுநர்களும் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தனது கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் ஒரு கூட்டம் நடத்தி, தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகளை மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும், அதேபோல், இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த நிலையில், அந்த ஆட்சியின் லட்சணம் என்ன என்பதை மக்களுக்கு புரியும்படி விளக்கம் வேண்டும் என்றும் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் நமது கட்சி ஓரளவுக்கு வளர்ந்து விட்டது, ஆனால் இன்னும் கிராமப்புறங்களில் வளர்ச்சி தேவை என்ற அடிப்படையில் விஜய், கிராமப்புறத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு கூடுதல் அறிவுரைகளை கூறியுள்ளதாகவும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கொடியேற்ற வேண்டும், ஒவ்வொரு கிராமத்தில் உள்ள மக்களுக்கும் நமது கட்சியின் கொள்கைகள், மக்களுக்காக செய்ய திட்டமிட்டு இருக்கும் சேவைகளை விளக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது.
மேலும், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களும், தலைமை இடமிருந்து பணம் வரும் என்று எதிர்பார்க்காமல் தங்கள் சொந்த காசை செலவு செய்து வருகின்றனர் என்றும், “விஜய்யை முதல்வர் ஆக்காமல் விடமாட்டோம்” என்றும் கூறி வருகின்றனர். 50 ஆண்டுகளாக அரசியல் நடத்தும் கட்சிகள் எப்படி அடிப்படையில் இருந்து அரசியல் செய்யுமோ, அதே போல் ஒரே ஆண்டில் அந்த அரசியலை செய்ய விஜய் முன்வந்திருப்பதை பார்க்கும்போது, அவர் இதை பல ஆண்டுகளாகத் திட்டமிட்டிருப்பார் என்றே கூறப்பட்டு வருகிறது.
Vijay Enters Full-Time Politics: District-wise Public Meetings, Protests – Creates Buzz!
விஜய், தமிழக வெற்றிக்கழகம், அரசியல், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், சட்டமன்றத் தேர்தல், தமிழக அரசியல், Vijay, Thammizhaga Vetri Kazhagam, politics, public meeting, protest, assembly elections, Tamil Nadu politics, full-time politics
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
