நடிகர் விஜய் தொடங்கிய தவெக, அதன் சிறப்பு பொதுக்குழு கூட்டம் முடிந்த கையோடு, அடுத்தகட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் தவெக சார்பில் வழக்கறிஞர்கள் விஜய்யின் கையெழுத்துடன் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். செயற்குழு முடிவுகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாலும், சட்ட வடிவத்திற்கு ஏற்ப படிவங்கள் கையெழுத்துடன் நேரில் வழங்கப்பட்டுள்ளன.
கட்சிக்கு சின்னம் ஒதுக்குவது அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுவது குறித்த முடிவை எடுக்கத் தேர்தல் ஆணையம் 30 முதல் 45 நாட்கள் வரை கால அவகாசம் எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. ரிஜிஸ்டர் செய்யப்பட்ட கட்சியாக இருக்கும் தவெக, அங்கீகாரம் பெற தேர்தலில் போட்டியிட்டு குறைந்தபட்ச வாக்கு சதவீதத்தை பெற்றிருக்க வேண்டும் போன்ற விதிகள் குறித்தும் வழக்கறிஞர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
விஜய், 2026 தேர்தலில் டிவி.கே. Vs டி.எம்.கே. என்று தெளிவாக அறிவித்த நிலைப்பாடு குறித்து டெல்லி அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனிக்கின்றன. விஜய்யின் போதுக்குழு பேச்சில், அவர் திமுகவை மட்டுமே நேரடியாக தாக்கியுள்ளார். அதிமுக அல்லது பாஜக குறித்து அவர் பேசவில்லை. மேலும், ஆதவ் அர்ஜுனா மூலமாக உதயநிதியை தாக்கியது, விஜய்யின் அரசியல் தாக்குதலில் ஏற்பட்ட ஒரு மாறுதலை காட்டுகிறது.
விஜய்யின் பேச்சில், அவர் தேசிய கட்சியான காங்கிரஸ் குறித்து எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. இதனால், காங்கிரஸுடன் கூட்டணி வைக்க அவர் ஆர்வம் காட்டுகிறாரோ என்ற ஊகங்களும் எழுகின்றன. விஜய் இப்போதைக்கு எந்த கூட்டணியையும் முடிவு செய்யவில்லை. அவர் டிசம்பர் மாதத்திற்காக காத்திருப்பதாகவும், கரூர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நீதியரசர் அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவை நவம்பர் 11 அல்லது 12ஆம் தேதிகளில் சந்தித்த பிறகுதான், அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், திமுக அரசு விஜய்யை மட்டுமே நெருக்கடிக்கு உள்ளாக்குவது, தமிழக மக்களிடையே உள்ள ஊழல், போதைப்பொருள் மற்றும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது போன்ற பிரச்சனைகளால் ஏற்படும் மக்கள் அழுத்தத்தின் விளைவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
