ஒரு குரூப்ல ஒருத்தன் கெட்டவனா இருந்தா அந்த குரூப்பே கெட்டு போயிடும்.. விஜய் + அதிமுக கூட்டணி சேர்ந்தால் திமுகவுக்கு தான் லாபம்.. விஜய்யின் கணக்கே வேற..!

  தங்கள் கூட்டணிக்கு ஒரு பிரமாண்டமான கட்சி வரப்போகிறது என சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த நிலையில், அந்தப் பிரம்மாண்டமான கட்சி தமிழக வெற்றி கழகமாகத்தான் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி…

eps vs vijay

 

தங்கள் கூட்டணிக்கு ஒரு பிரமாண்டமான கட்சி வரப்போகிறது என சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த நிலையில், அந்தப் பிரம்மாண்டமான கட்சி தமிழக வெற்றி கழகமாகத்தான் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இது குறித்து பல தொலைக்காட்சி விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், அரசியலை நன்கு அறிந்தவர்கள், புரிந்தவர்கள், ஆழமாக அலசுபவர்கள் அதிமுக கூட்டணியில் விஜய் சேர வாய்ப்பே இல்லை என்றுதான் கூறுகிறார்கள்.

மேலும், அதிமுக கூட்டணியில் விஜய் சேர்ந்தால், அது திமுகவுக்கு அது மிகப்பெரிய பலமாக அமைந்துவிடும் என்றும், எல்லோரும் நினைப்பது போல் அதிமுக-விஜய் கூட்டணி சேர்ந்தால் அந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்பது நடக்காது என்றும், “இந்தக் கணக்கில் 1+1 என்பது 2 அல்ல, 1+1=0” என்றுதான் விவரம் அறிந்த அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் அதிமுகவில் இணைந்தால் ஏற்படும் விளைவுகள்:

பாஜக எதிர்ப்பு வாக்குகள்: விஜய் அதிமுக கூட்டணியில் சேர்ந்தால், அந்தக் கூட்டணியில் பாஜகவும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கும் என்பதால், ஒட்டுமொத்த பாஜக எதிர்ப்பு ஓட்டுகள் திமுகவுக்கு சென்றுவிடும்.

சிறுபான்மையினர் வாக்குகள்: அதேபோல், விஜய் அதிமுக கூட்டணியில் சேர்ந்தால், சிறுபான்மையினர் ஓட்டுகள் எல்லாமே திமுகவுக்குச் சென்றுவிடும்.

நடுநிலை வாக்காளர்களின் அதிருப்தி: அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் வேண்டாம் என இருக்கும் நடுநிலை வாக்காளர்கள், விஜய் மீது அதிருப்தி அடைவார்கள். “இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாகத்தான் உங்களை நினைத்தோம், ஆனால் நீங்கள் விஜயகாந்த், கமல்ஹாசன் போலவே திராவிட கட்சிகளுடன் இணைந்துவிட்டால், உங்களை எதற்காக நாங்கள் தேர்வு செய்ய வேண்டும்?” என்ற கேள்வியை எழுப்புவார்கள். இந்த கேள்விக்கு விஜய்யால் பதில் சொல்ல முடியாது என்பதால், விஜய் அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பே இல்லை என்பதுதான் இன்றைய அரசியல் நிலவரமாக உள்ளது.

விஜய்க்கு சாதகமான நிலை என்ன?

திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் விஜய் தனியாக ஒரு கூட்டணி அமைத்தால், பாஜக எதிர்ப்பு ஓட்டுகள், சிறுபான்மையினர் ஓட்டுகள், திமுக ஆட்சி மீதான வெறுப்பில் உள்ள ஓட்டுகள், மற்றும் அதிமுக-திமுக மீது அதிருப்தியில் உள்ள ஓட்டுகள் என ஆகியவை ஒட்டுமொத்தமாக விஜய்க்கு வர அதிக வாய்ப்பு இருக்கிறது. இத்துடன் விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள், முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்களின் வாக்குகளும் சேர்ந்தால், பெண்கள் வாக்குகள் விஜய் அமைக்கும் கூட்டணிக்கு சென்றால் அது வெற்றி கூட்டணியாக அமையும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

எனவே, திராவிட கட்சிகளுடன் கூட்டணி என்ற தவறை விஜய் செய்ய மாட்டார் என்றும், எடப்பாடி பழனிசாமி கூறிய பிரமாண்டமான கட்சி நிச்சயமாக தமிழக வெற்றி கழகமாக இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஒரு குரூப்ல ஒருத்தன் கெட்டவனா இருந்தா அந்த குரூப்பே கெட்டு போயிடும் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த வகையில் ஒரே ஒரு தவறான நபருடன் கூட்டணி சேர்ந்தால் ஒட்டுமொத்த நஷ்டம் கிடைக்கும் என்பது விஜய்க்கு நன்றாக தெரியும்.