தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் எதிர்பாராத திருப்பங்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் இடையே நிலவும் விரிசல் தற்போது பகிரங்கமாக தொடங்கியுள்ளது. ராகுல் காந்தியுடனான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட இழுபறி மற்றும் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலேயே நீடிக்க முடிவு செய்திருப்பது விஜய்யை தனிப்பட்ட முறையில் அதிருப்தியடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது. தன்னை ஒரு முக்கிய சக்தியாக மதிக்க தவறிய காங்கிரஸிற்கு பாடம் புகட்ட விஜய் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அதிமுக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் சேரக்கூடும் என்ற அதிரடி தகவல் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யை பொறுத்தவரை, அவரது முதல் மற்றும் முக்கிய குறிக்கோள் திமுகவை ஆட்சியில் இருந்து இறக்குவதுதான். இதற்கு ஒரு வலுவான கூட்டணி அவசியம் என்பதை அவர் உணர்ந்துள்ளார். அதிமுக மற்றும் பாஜகவின் வாக்கு வங்கிகளுடன் விஜய்யின் இளைஞர் மற்றும் ரசிகர் பட்டாளம் இணைந்தால், அது திமுக கூட்டணிக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
அரசியல் விமர்சகர்களின் கணிப்புப்படி, இத்தகையதொரு மெகா கூட்டணி அமைந்தால் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு ‘ஜீரோ’ ஆகும் நிலை கூட ஏற்படலாம். விஜய் இந்த கூட்டணியில் இணைந்து சுமார் 50 தொகுதிகளில் வெற்றி பெற்றால் கூட, அது அவரது அரசியல் வாழ்வின் ஒரு மிகப்பெரிய தொடக்கமாக இருக்கும். 2026-ல் திமுகவை வீழ்த்துவதே பிரதான இலக்காக கொண்டு செயல்படும் விஜய், அதன் பிறகு 2031 தேர்தலில் தனது பலத்தை முழுமையாக நிரூபித்து தனித்து ஆட்சியை பிடிக்கும் நீண்ட கால திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி சேரக்கூடும் என்ற ஆரம்பக்கால எதிர்பார்ப்புகளை ராகுல் காந்தி கைவிட்டு, மீண்டும் திமுகவின் நிழலில் ஒதுங்கியதை விஜய் ஒரு துரோகமாகவே கருதுவதாக அவரது ஆதரவாளர்கள் முணுமுணுக்கின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு சுயேச்சையான சக்தியாக மாற விரும்பவில்லை என்பதை விஜய் தெளிவாக புரிந்து கொண்டுள்ளார். எனவே, தேசிய அளவில் செல்வாக்கு மிக்க பாஜக மற்றும் மாநில அளவில் பலமான கட்டமைப்பு கொண்ட அதிமுகவுடன் கைகோர்ப்பது விஜய்க்கு ஒரு Win-Win வியூகமாக அமையும்.
விஜய்யின் இந்த திடீர் அரசியல் நகர்வுகள் திமுக முகாமை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விஜய் அங்கு இணைந்தால் ‘டோட்டல் ஸ்வீப்’ செய்யும் அளவிற்கு அக்கூட்டணிக்கு வலிமை கிடைக்கும். இளைஞர்களின் வாக்குகள் சிதறாமல் ஒருமுகப்படுவது திமுகவின் ‘திராவிட மாடல்’ அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கருவியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் இந்த துணிச்சலான முடிவை எடுப்பாரா என்பதே இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. தனது கொள்கைகளுக்கும், தான் முன்னிறுத்தும் மதச்சார்பற்ற சமூக நீதி அடையாளத்திற்கும் பாஜகவுடனான கூட்டணி பொருந்துமா என்ற தயக்கம் அவருக்குள் இருந்தாலும், ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற அரசியல் தத்துவத்தின்படி அவர் காய்களை நகர்த்தக்கூடும். 2026 தேர்தல் களம் விஜய்யின் துணிச்சலையும், அவரது ராஜதந்திரத்தையும் உரசி பார்க்கும் ஒரு மிகப்பெரிய பரீட்சையாக அமையப்போகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
