தமிழக அரசியலில், நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு ஒரு புதிய அலைகளை ஏற்படுத்தி வருகிறது. அவர் நடத்தும் கூட்டங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, அரசியல் கட்சிகளைச் சிந்திக்க வைத்துள்ளது. குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுக, விஜய்யின் நகர்வுகளை உன்னிப்பாக கண்காணிப்பதாக அரசியல் விமர்சகர் மணி கருத்து தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
திமுக மற்றும் அதிமுகவின் கூட்டங்களுக்கு வரும் மக்கள் பெரும்பாலும் பணம் கொடுத்து வரவழைக்கப்படுகிறார்கள். திருவாரூரில் அமைச்சர் நேரு மற்றும் பூண்டி கலைவாணன் நடத்திய கூட்டம், பல லட்சங்கள் செலவு செய்து ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றும் எடப்பாடி பழனிசாமி அல்லது ஸ்டாலின் ஒரு கூட்டத்திற்கு சென்றால், ஒரு இடத்திற்கு ₹40-50 லட்சம் செலவு செய்யப்படுகிறது. ஆனால் விஜய்க்கு வரும் கூட்டம் 90% தானாகவே வருகிறது. பணம் வாங்காமல், தன்னிச்சையாக வரும் கூட்டம் அது. இதுவே திமுக மற்றும் அதிமுகவிற்கு பயத்தை ஏற்படுத்துகிறது.
வெறும் கூட்டத்தின் கணக்கை மட்டும் கணக்கிடக்கூடாது. விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் பார்த்தவர்களின் எண்ணிக்கை கோடிகளை கடக்கிறது. ஒருவேளை, அவர்களில் மூன்றில் ஒரு பங்கு வாக்களித்தால் கூட, அது ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும். இது திமுகவில் உள்ள பெரிய தலைவர்களுக்கு புரிந்துவிட்டது. அதனால் தான் அவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது.
விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக திமுக கவனிக்கிறது. கரூரில் ஒருவேளை கலவரங்களை ஏற்படுத்தினால், அது திமுகவுக்கு எதிராக திரும்பி விஜய்யின் வளர்ச்சிக்கு உதவும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். எனவே நாளைய கூட்டத்தில் திமுக தரப்பில் இருந்து கலவரங்கள் செய்ய வாய்ப்பில்லை.
மக்கள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் ஒரு விஷயத்தை பற்றிப் பேசினால், உடனடியாக அதற்கு அரசு பதிலளிக்கிறது அல்லது சம்பந்தப்பட்ட திட்டங்களை அறிவிக்கிறது. உதாரணத்திற்கு, அலையாத்தி காடுகளை பற்றி அவர் பேசினால், அரசு அலையாத்தி காடுகள் மாநாட்டை நடத்துகிறது. வேலுநாச்சியார் பற்றி பேசினால், திடீரென அவருக்கு சிலை நிறுவப்படுகிறது. இது விஜய்க்கு இருக்கும் செல்வாக்கிற்கு ஒரு சான்றாக அமைகிறது.
விஜய்க்கு என்ன தான் செல்வாக்கு இருந்தாலும், கூட்டம் கூடினாலும் தனியாக நின்று தேர்தலை சந்தித்தால், வெற்றி பெறுவது மிகவும் கடினம். தமிழக அரசியலில் வெற்றி பெற கூட்டணி அவசியமானது. விஜய் ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சி மாற்றம் உறுதியாக இருக்கும். ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு பிரதான எதிரிகளையும் கையாள்வது கடினமானது. இதை எப்படி விஜய் எதிர்கொள்ள இருக்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மொத்தத்தில் விஜய்யின் அரசியல் எதிர்காலம், அவர் எடுக்கும் முடிவை பொறுத்தது. அவர் தனித்து நின்று தனது கட்சியின் பலத்தை காட்டுவாரா, அல்லது ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றியை நோக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
