தமிழக அரசியலின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக கருதப்படும் ‘கொங்கு மண்டலத்தில்’ ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தின் செல்வாக்கு குறித்த கள ஆய்வு முடிவுகள் சில சுவாரசியமான தகவல்களை வெளிப்படுத்துகின்றன.
கொங்கு மண்டலம் பாரம்பரியமாக அதிமுகவின் வலுவான கோட்டையாக இருந்து வருகிறது. ஆனால், ஈரோடு கூட்டத்தில் செங்கோட்டையன் போன்ற அதிமுக-வின் மூத்த முகங்கள் விஜய்யுடன் இணைந்தது, அதிமுக தொண்டர்களிடையே ஒரு பெரிய குழப்பத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எம்ஜிஆர் காலத்து விசுவாசிகள் மற்றும் ஜாதி ரீதியான வாக்கு வங்கிகளில் செங்கோட்டையனின் செல்வாக்கு விஜய்க்கு பெரிய பலமாகத் தெரிகிறது.
கள ஆய்வின்படி, ஈரோடு கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 70% பேர் 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். “நாங்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக விஜய்யைத்தான் பார்க்கிறோம்” என்பது இவர்களின் பொதுவான கருத்தாக உள்ளது. டிஜிட்டல் தளங்களில் விஜய்க்கு இருக்கும் 40% ஆதரவு, இந்த இளைஞர் பட்டாளத்தின் மூலம் வாக்குகளாக மாற வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தில் திமுக-வை “தீய சக்தி” என்று விஜய் மிக கடுமையாகச் சாடியது, திமுக எதிர்ப்பு மனநிலையில் உள்ள நடுநிலை வாக்காளர்களை தவெக நோக்கி ஈர்த்துள்ளது. பாஜகவை ஒரு கொள்கை எதிரியாக மட்டும் பார்த்துவிட்டு, திமுக-வை பிரதான எதிரியாக விஜய் சித்தரிப்பது, கொங்கு மண்டலத்தின் ‘சாஃப்ட் பிஜேபி’ ஆதரவாளர்களையும், அதிமுக அதிருப்தியாளர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
மஞ்சள் விவசாயிகளின் பிரச்சினைகள், ஈரோடு சாயக்கழிவு நீர் பிரச்சினை போன்ற மண்ணின் மைந்தர்களின் குறைகளை விஜய் தனது உரையில் தொட்டது, விவசாய குடும்பங்களிடையே அவருக்கு ஒரு நேர்மறை பிம்பத்தை உருவாக்கியுள்ளது. வெறும் சினிமா நட்சத்திரமாக பார்க்கப்பட்ட விஜய், தற்போது ‘மக்களுக்கான தலைவராக’ உருவெடுக்க தொடங்கியுள்ளதாக மக்கள் உணர்கின்றனர்.
2026 தேர்தலில் கொங்கு மண்டலம் ஒரு முக்கிய அம்சமாக அமையும். திமுக-வின் அதிகார பலம், அதிமுக-வின் கட்டமைப்பு பலம் ஆகியவற்றை தாண்டி, விஜய்யின் ‘மாற்றத்திற்கான முழக்கம்’ இங்கே 20% முதல் 25% வரை வாக்குகளை பிரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய தலைவலியாகவும், அதிமுகவின் வாக்கு வங்கியில் ஒரு சரிவாகவும் அமையும் என கள ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
