தமிழக அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்துள்ள நடிகர் விஜய், தனது கட்சி தொடக்கத்திற்கு பிறகு, மாநிலம் முழுவதும் முதல்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார். ஆனால், அந்த பயணத் திட்டம், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது, விஜய் மற்றும் அவரது கட்சியான த.வெ.க மீது, “பனையூர் பார்ட்டி” மற்றும் “வீக்கெண்ட் பார்ட்டி” என்ற விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. பொதுவாக ஒரு அரசியல் தலைவர் சுற்றுப்பயணமோ, தேர்தல் பிரச்சாரமோ செய்கிறார் என்றால், தொடர்ச்சியாக ஒரு வாரம், 10 நாட்கள் ஏன் ஒரு மாதம் கூட சென்றதுண்டு. ஆனால் விஜய் ஞாயிறு முதல் வெள்ளி வரை பனையூரில் இருந்துவிட்டு, சனிக்கிழமை மட்டும் பிரச்சாரம் செய்வது அரசியல்வாதிகளுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் புதுமையாக உள்ளது.
நடிகர் விஜய்யின் ரசிகர்கள், அவர் தனது திரைப்படங்களில் சொல்வது போல், “ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்ற பஞ்ச் வசனத்திற்கு ஏற்ப, முழு நேர அரசியலில் குதித்துவிட்டார். ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி போன்று, மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, மூன்றரை மாத கால சுற்றுப்பயணத்தில் வெறும் 16 நாட்கள் மட்டுமே பயணம் மேற்கொள்ளப்படும் என்றும், அதுவும் சனிக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது தொண்டர்களுக்கு அதிருப்தியாக இருந்தாலும், அதில் கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களின் அக்கறை தென்படுகிறது.
விஜய்யின் பயணத்திட்டம்:
காலம்: செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை.
பயண நாட்கள்: 16 நாட்கள் மட்டுமே.
சுற்றுப்பயணம்: ஒவ்வொரு சனிக்கிழமையும், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களில் பயணம்.
இந்த பயண திட்டம், விஜய் மக்களை நேரில் சந்திப்பதற்கான நேரத்தை மிக் குறைவாகவே வழங்குகிறது. ஒரு முழுமையான அரசியல் தலைவர் மக்களின் தேவைகளையும், குறைகளையும் அறிந்துகொள்ள, இது போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் விஜய் ஏன் சனிக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டார் என்பது குறித்து பல காரணங்கள் உள்ளன.
சனிக்கிழமை வார இறுதி நாள் என்பதால், அதிக தொண்டர்களையும், மக்களையும் எளிதாக திரட்ட முடியும். மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள், குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது மக்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்திவிடும். ஆனால் விஜய்யின் இந்த பகுதி நேர பயணம் மக்களுக்கு இடையூறும் இல்லாமல், அதே நேரத்தில் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பகுதி நேர பிரச்சாரம் என்பது ஒரு முன்னோட்டம் தான், இதுக்கே விஜய்க்கு எதிரான அரசியல் கட்சியினர் தாங்க மாட்டார்கள். அப்படியெனில் டிசம்பருக்கு பின் அவர் தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் என்ன ஆகும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
ஆனால் அதே நேரத்தில் விஜய் சென்றாலே கூட்டம் கூடும் என்ற நம்பிக்கை ஒருபுறம் இருந்தாலும், அந்த கூட்டத்தை வெற்றிகரமான வாக்குகளாக மாற்றுவது எப்படி என்பதுதான் மிகப்பெரிய சவால். வெறும் பிரசார நாடகங்கள் மட்டும் இல்லாமல், மக்களின் உண்மையான பிரச்சனைகளை அறிந்துகொண்டு, களத்தில் இறங்கி விஜய் செயல்பட்டால், வாரத்திற்கு ஒரு நாள் என்ன, ஒரு மணி நேரம் செயல்பட்டால் கூட போதுமானது.
விஜய்யின் இந்த ‘சனிக்கிழமை சீக்ரெட் மக்கள் மத்தியில் நிச்சயம் ஒரு நன்மதிப்பை தரும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் ஒரு ட்வீட் போட்டாலே கோடிக்கணக்கானோர் மத்தியில் சென்றுவிடும் நிலையில், வாரத்திற்கு ஒரு நாள் பயணம் என்பது நிச்சயம் தவெகவுக்கு ஒரு பூஸ்ட்ட்டாகத்தான் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
