கரூரில் வச்சு வெளுக்க போகும் விஜய்.. செந்தில் பாலாஜியை டைரக்ட் அட்டாக் செய்வாரா? கிட்னி விவகாரம், நெசவாளர்கள் விவகாரம், மணல் கொள்ளை விவகாரம், நகராட்சி நிர்வாகம் குறித்த கேள்விகள் வரும்.. செந்தில் பாலாஜி பதில் சொல்வாரா? 3 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் சனிக்கிழமை கரூரில் ஒரு பிரம்மாண்டமான மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டம் ஏற்கனவே திருச்சியிலும் திருவாரூரிலும் நடைபெற்ற கூட்டத்தை போல், ஆளுங்கட்சியான திமுக-வுக்கு…

vijay sethil balaji

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் சனிக்கிழமை கரூரில் ஒரு பிரம்மாண்டமான மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டம் ஏற்கனவே திருச்சியிலும் திருவாரூரிலும் நடைபெற்ற கூட்டத்தை போல், ஆளுங்கட்சியான திமுக-வுக்கு கடும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியுமான செந்தில் பாலாஜியை விஜய் நேரடியாகத் தாக்குவாரா என்பதுதான் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாத பொருளாக உள்ளது.

திருச்சியில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர், அவரது குடும்பத்தினர் மற்றும் அரசு மீது விஜய் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்திலும் திமுக ஆட்சியின் திட்டங்கள், வாக்குறுதிகள் மற்றும் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டினார். இது திமுகவினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கரூரில் நடைபெறவுள்ள கூட்டத்திலும் அதேபோல், திமுக அரசுக்கு எதிராக பல உள்ளூர் பிரச்சனைகள் குறித்து விஜய் கேள்வி எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர், செந்தில் பாலாஜியின் கோட்டை. அங்கு நடைபெறும் இந்த இந்த கூட்டம் அரசியல் ரீதியாக ஒரு முக்கியத்துவமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி குறித்து விஜய் தனது பேச்சில் குறிப்பிடுவாரா அல்லது அவரை மறைமுகமாக தாக்குவாரா என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. செந்தில் பாலாஜியின் அரசியல் செல்வாக்கு மற்றும் கரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து விஜய் கேள்வி எழுப்பலாம்.

மேலும் கரூரில் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்த சட்டவிரோத கிட்னி திருட்டு குறித்த விவகாரம், மாநில அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசின் செயல்பாடு மற்றும் காவல்துறை விசாரணை குறித்து விஜய் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது.

கரூர், நெசவு தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் நகரமாக அறியப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நெசவாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அவர்களின் பிரச்சனைகள், அரசின் திட்டங்கள் முறையாக சென்றடையாதது போன்ற குறைகளை விஜய் சுட்டிக்காட்டலாம்.

கரூரில் காவிரி ஆற்றில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளை குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மணல் கொள்ளையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் விஜய் தனது பேச்சில் வலியுறுத்தக்கூடும்.

கரூர் நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள், மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் உள்ள குறைபாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த கேள்விகள் விஜய் கூட்டத்தில் முன்வைக்கப்படலாம்.

இந்த கூட்டத்தில் சுமார் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, மக்கள் மத்தியில் விஜய்க்கு உள்ள ஆதரவை காட்டும் ஒரு பலப்பரீட்சையாக அமையும். இது சட்டசபை தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் கரூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்த மாநாட்டில் விஜய் பேச இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக உற்று நோக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக என இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக விஜய் ஒரு புதிய சக்தியாக உருவெடுப்பாரா என்பதை அவரது அடுத்தடுத்த கூட்டங்கள், அவர் எடுக்கும் முடிவுகள், அறிவிக்கப்போகும் மக்கள் நல திட்டங்கள் போன்றவை தீர்மானிக்கும்.