6 மாதங்களுக்கு முன்பு விஜய்யை ஒரு நடிகராக தவெக தொண்டர்கள் பார்த்தது உண்மைதான்.. ஒருமுறை அவரை நேரில் சந்தித்தால் போதும் என நினைத்ததும் உண்மை தான்.. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.. சினிமா தலைவனாக பார்த்த விஜய்யை சிஎம்-ஆக பார்க்கனும்ன்னு தொண்டர்கள் முடிவு பண்ணிட்டாங்க.. அதனால் தான் இவ்வளவு எழுச்சி.. நிச்சயம் கோட்டையில் விசில் ஊதப்படும்..!

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஏற்படுத்தி வரும் சலசலப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரசியல் விமர்சகர்கள் மற்றும் மாற்று கட்சியினரின் பார்வையில் தவெக ஒரு எளிய…

vijaycampaign

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஏற்படுத்தி வரும் சலசலப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரசியல் விமர்சகர்கள் மற்றும் மாற்று கட்சியினரின் பார்வையில் தவெக ஒரு எளிய அரசியல் கட்சியாக தோன்றினாலும், அந்த கட்சியின் தொண்டர்கள் மற்றும் விஜய்யின் ரசிகர்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்ட மாற்றம், வரும் தேர்தல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சுமார் 6 மாதங்களுக்கு முன்பு வரை, விஜய்யை ஒரு நடிகராக மட்டுமே பார்த்த அவரது ரசிகர்கள், “தலைவரை ஒருமுறை நேரில் பார்த்தால் போதும், அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்ற எளிய ஆசையுடன் மட்டுமே இருந்தனர். இது ஒரு சினிமா நட்சத்திரத்தின் ரசிகர்களுக்கே உரிய இயல்பான மனநிலை. அரசியல் மாநாடுகள் மற்றும் கூட்டங்களுக்கு அவர்கள் திரண்டு வந்தாலும், அது அரசியல் கொள்கைகள் மீதான ஈர்ப்பை விட, தங்களின் அசைக்க முடியாத சினிமா நாயகனை காணும் ஆர்வமே பிரதானமாக இருந்தது. விஜய் எப்போது அரசியல் பாதையை தேர்வு செய்தாலும், அவர் அரசியல் முதிர்ச்சியை எட்டுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதே பெரும்பாலான அரசியல் அறிஞர்களின் கருத்தாக இருந்தது.

ஆனால், கடந்த சில மாதங்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் விஜய்யின் பொதுக்கூட்ட உரைகள் இந்த சூழலை வெகுவாக மாற்றியமைத்துள்ளன. விஜய்யை ஒரு ‘சினிமா தலைவனாக’ மட்டுமே பார்த்த தொண்டர்கள், இப்போது அவரை ஒரு ஆட்சியாளராக, ஒரு முதலமைச்சராக பார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்த மனநிலை மாற்றம் தான் தற்போது தவெகவின் எழுச்சிக்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தலைவனை கோட்டையில் அமர வைப்போம், என்ற உறுதியுடன் தொண்டர்கள் இப்போது களப்பணியில் இறங்கியுள்ளனர். சினிமா கவர்ச்சியை கடந்து, விஜய் முன்வைக்கும் கொள்கைகள், அவர் எழுப்பும் கேள்விகள் மற்றும் அவரது ஆளுமை ஆகியவை அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை விதைத்துள்ளது.

திராவிட அரசியல் கட்சிகளின் பலத்த கோட்டையாக கருதப்படும் தமிழகத்தில், விஜய்யின் இந்த எழுச்சி ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு உள்ள செல்வாக்கு, இந்த மனநிலை மாற்றத்துடன் இணையும் போது, ஒரு பெரிய அரசியல் சுனாமியை ஏற்படுத்தும் திறன் கொண்டது. தவெக தொண்டர்களின் இந்த உறுதி, மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்பதில் சந்தேகமில்லை. வரவிருக்கும் தேர்தல்களில், ஒரு நடிகராக விஜய்க்கு கிடைத்த வரவேற்பை விட, ஒரு தலைவராக அவருக்கு கிடைக்கும் ஆதரவு மிக அதிகமாக இருக்கும் என்பது அரசியல் விமர்சகர்களின் கணிப்பு.

நிச்சயம் கோட்டையில் விசில் ஊதப்படும், என்ற தொண்டர்களின் நம்பிக்கையும், விஜய்யின் அரசியல் வியூகங்களும் இணைந்து, தமிழக அரசியலில் ஒரு புதிய வரலாற்றை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.