விஜய் அரசியலுக்கு வந்த போது, அவருக்கு என்ன அரசியல் தெரியும்? கத்துக்குட்டி என்று விமர்சித்தவர்கள் கூட இன்று அவருடைய ராஜதந்திரத்தை பார்த்து ஆச்சரியமடைந்து வருகின்றனர்.
திமுகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைப்பது என்பது தேவையில்லாத வேலை. அப்படியே ஒன்றிணைத்தாலும், அது கூட்டணிக்குள் குழப்பத்தையே ஏற்படுத்தும். இதை உணர்ந்த விஜய், திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைத்து “மக்களுடன் கூட்டணி” என்ற விஜயகாந்த் பாணியை கைப்பற்றியுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில், மற்ற அனைத்து கட்சிகளின் ஊழல்களையும் வரிசைப்படுத்தி விமர்சனம் செய்வதை விட, திமுகவை மட்டுமே குறிவைத்து விமர்சனம் செய்தால் திமுகவுக்கு எதிரான வாக்குகள் அனைத்தும் தன் மீது திரும்பும் என்பது பிரசாந்த் கிஷோர் மற்றும் ஆதவ் அர்ஜுனா கூறிய ராஜதந்திரத்தின் படி விஜய் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், திமுகவுக்கு எதிராக செயல்படுபவர் விஜய் மட்டுமே என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்கிவிட்டால், அதிமுக நிலைமை திண்டாட்டமாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை உணர்ந்த தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள், “அதிமுகவுடன் கூட்டணி சேர்வது வெற்றியை தராது” என்று முடிவு செய்து, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறைந்த சீட்டுகள் கிடைத்தாலும் அதில் வெற்றி பெறும் கூட்டணியில் இணைவது தான் நல்லது. அதிமுகவிடம் அதிக சீட்டுகள் வாங்கி தோல்வி அடைவதை விட, திமுக கூட்டணியே பொருத்தமானது என்று இந்த இரண்டு கட்சிகள் சிந்திக்க தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவுக்கு, அதிமுகவை விட்டால் வேறு வழியே இல்லை என்ற நிலையில், அதிமுக மிரட்டியோ அல்லது சமாதானப்படுத்தியோ கூட்டணியை ஏற்படுத்தலாம். ஆனால், அந்த கூட்டணி திமுக கூட்டணிக்கு மாற்றாக அமைய வாய்ப்பில்லை என்பது அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, வரும் 2026 தேர்தல் என்பது விஜய் மற்றும் திமுக கூட்டணி இடையே உண்மையான போட்டியாக இருக்கும் என்று அரசியல் விமர்சனங்கள் கூறுகின்றன. இன்னும் தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கும் நிலையில், இவையெல்லாம் நடக்குமா, அல்லது வேறு ஏதாவது திடீர் திருப்பம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.